Published : 28 May 2022 07:45 AM
Last Updated : 28 May 2022 07:45 AM

எரிபொருட்கள் மீதான வரி விதிப்பைக் கைவிட வலியுறுத்தி கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எரிபொருட்கள் மீதான வரி விதிப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.படம்: ம.பிரபு

சென்னை: எரிபொருட்கள் மீதான வரி விதிப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

மத்திய பாஜக அரசின்கொள்கைகளால் வேலையின்மை, வெறுப்பு அரசியல் ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் விரோதப் போக்குடன் செயல்படுவதாகவும் புகார் தெரிவித்து, இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரிகளை முற்றிலும் கைவிட வேண்டும், வருமான வரி வரம்பை எட்டாத அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும், நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முழுவதுமாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பேசியதாவது: சிபிஐ (எம்-எல் லிபரேசன்) மாநிலச் செயலர் என்.கே.நடராஜன்: வெறுப்பு அரசியல் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, மத்திய பாஜக அரசு குளிர்காய்ந்து வருகிறது. இலங்கையைவிட இந்தியாவில் பல மடங்கு எழுச்சிக்காக மக்கள் தயாராக உள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: மக்களின் எழுச்சிக்கு முன் எந்த சர்வாதிகாரமும் வெற்றி பெறாது என்பதற்கு இலங்கை உதாரணம். இந்தியாவிலும் அத்தகையப் போராட்டம் உருவாகும். இதை தவிர்க்க முடியாது. எனவே, பழைய விலைக்கு பெட்ரோலை கொண்டுவர வேண்டும்.

பெட்ரோல் விலையைக் குறைக்க, தமிழக கோட்டைக்குச் செல்வதைவிட அண்ணாமலை டெல்லி கோட்டைக்குச் சென்றுதான் போராட வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: பிரதமர் முன்னிலையில் தமிழகப் பிரச்சினைகளை பேசத்தான் வேண்டும். அண்ணாமலையைப் பொறுத்தவரை, அதிமுகவைவிட திமுகவை எதிர்த்து நாங்கள் தீவிர அரசியல் செய்கிறோம் என காட்டிக் கொள்வதற்காக ஏதாவது பேசுவார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்: தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி, நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்னையையும் பேசவில்லை. விழாவில் முதல்வர் அரசியல் செய்கிறார் என்கிறார் அண்ணாமலை. மக்களின் பிரச்னைகளைத்தான் முதல்வர் பேசுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x