Published : 28 May 2022 07:16 AM
Last Updated : 28 May 2022 07:16 AM

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதி தேர்விலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு

சென்னை: அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழித் தகுதி தேர்விலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இது தொடர்பாக தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறைச் செயலர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குருப்-1, குருப்-2, குருப்-2-ஏ உள்ளிட்ட 2 நிலைகளைக் கொண்ட போட்டித் தேர்வுகளில், முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாய தமிழ் மொழித்தாள் தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது. இத்தகையதேர்வுகளில் கட்டாய தமிழ் மொழிதகுதித் தாள் எழுதுவதில் இருந்துமாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், டிஎன்பிஎஸ்சி நடத்தும்குருப்-3, குருப்-4, குருப்-7-பிபோன்ற ஒரேநிலை கொண்ட போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள், தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தாளாக (Tamil Eligibility-cum-Scoring Test) நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளில் வாரியம் மற்றும் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிப்பாடம் மட்டுமே படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதற்குப் பதிலாக ரேங்கிங், மதிப்பீடு செய்வதற்காக அவர்களுக்கென தனியாக பொது ஆங்கிலத் தேர்வு (10-ம்வகுப்பு தரம்) நடத்தப்படும். (இத்தேர்வில் மொழி பெயர்ப்புப் பகுதி இடம்பெறாது)

மேற்குறிப்பிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விலக்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மட்டுமின்றி, மாநிலத்தின் இதர தேர்வு முகமைகளால் (ஆசிரியர் தேர்வு வாரியம், வனப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் போன்றவை) நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கும் பொருந்தும்.

இந்த விலக்கு, உடல் இயக்க குறைபாடு, பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, பேச்சுமற்றும் மொழித்திறன் குறைபாடு, அறிவுசார் குறைபாடு, மனநலபாதிப்பு, நாள்பட்ட நரம்பியல் குறைபாடுகள், பன்முக குறைபாடுகள் (பார்வையின்மையுடன் செவித்திறன் குறைபாடு உட்பட) கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும்.

இந்த விதிவிலக்கு 40 சதவீதத்துக்கும் குறைவான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும். இந்த விலக்கைப் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள், உரிய சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x