

பிரபல எழுத்தாளரும், சுய முன்னேற் றப் பேச்சாளருமான மரபின் மைந்தன் முத்தையாவின் 60-வது நூல் வெளியீட்டு விழா மலேசியாவில் மே 23-ம் தேதி நடக்க உள்ளது.
கவிதை, வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், இலக்கியம், மொழி பெயர்ப்பு, திறனாய்வு உட்பட பல்வேறு துறைகளில் மரபின் மைந்தன் முத்தையா இதுவரை 59 நூல்கள் எழுதியுள்ளார். அவரது 60-வது புத்தகமாக ‘இணைவெளி’ எனும் தலைப்பில் கவிதை நூல் வெளிவருகிறது. இதில் அந்தரங்கம், பகிரங்கம், அமரத்துவம், தெய்வீகம் ஆகிய பகுதிகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலை ஃபுட் பிரின்ட்ஸ் பதிப்பகம் பதிப்பித்துள்ளது.
‘இணைவெளி’ கவிதை நூல் வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் ம.இ.கா. தலைமையகத்தில் உள்ள நேதாஜி அரங்கில் வரும் 23-ம் தேதி நடக்க உள்ளது. மலேசிய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன் நூலை வெளியிடுகிறார். சிறப்பு விருந்தினராக மலேசிய தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் டத்தோ எம்.சங்கரன் பங்கேற்கிறார். தேசிய நலநிதிக் கூட்டுறவு சங்க தலைமை நிர்வாகி டத்தோ பி.சகாதேவன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தொடர்புக் குழு தலைவர் பெ.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். ‘கண்ணதாசனின் சந்தங்கள்’ என்ற தலைப்பில் நூலாசிரியர் மரபின் மைந்தன் முத்தையா சிறப்புரை நிகழ்த்துகிறார்.முன்னதாக, அவர் மலேசியாவின் தாப்பா நகரில் மே 21-ம் தேதி நடக்கும் கண்ணதாசன் விழாவிலும் மே 22-ம் தேதி கிள்ளாங் நகரில் ஈஷா தியான அன்பர்களின் கூட்டத்திலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தவுள்ளார்.