

ரூ.4,300 கோடி மதிப்பிலான தொழிலை விட்டுவிட்டு தேர்தலில் போட்டியிடுவது, மதுரையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காகத்தான் என உறுதியளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக வேட்பாளர் பி.டி.ஆர்.பி.தியாகராஜனை வெற்றி பெறச் செய்வார்களா? என்பது கட்சியினரிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், இதைச் சுற்றியுள்ள பகுதிகள், சிம்மக்கல், காஜிமார் தெரு, எல்லிஸ் நகர், எஸ்எஸ் காலனி, ஆரப்பாளையம் உள்ளிட்ட நகரின் மையப்பகுதியை உள்ளடக்கியது மத்திய தொகுதி. இத்தொகுதி 1957-ம் ஆண்டு முதல் ஒரு இடைத்தேர்தல் உட்பட 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இங்கு 1977-ல் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 4 முறையும், தமாகா 2 முறையும், திமுக 5 முறையும், தேமுதிக ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. 1980-ல் நடந்த தேர்தலில் ப.நெடுமாறன் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது அதிமுக சார்பில் எம்.ஜெயபால், திமுகவில் முன் னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனி வேல்ராஜனின் மகன் தியாகராஜன் போட்டியிடுகின்றனர். தென் மாவட்ட திமுக வேட்பா ளர்களிலேயே மிக முக்கியமானவராகக் கருதப்படுபவர் தியாகராஜன். இத்தொகுதியில் கட்சித் தலைமையின் நேரடி கண்காணிப்பில் தேர்தல் பணிகள் நடைபெறுகிறது.
நகரின் முக்கிய வர்த்தகப் பகுதியான இங்கு மக்கள் நெருக்கடி அதிகம். கடும் போக்குவரத்து நெரிசல், முறையாக வழங்காத குடிநீர், தரமற்ற சாலை, பொங்கி வழியும் பாதாள சாக்கடை, திறந்தவெளி கால்வாய்கள் என மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஏராளம். இதை தீர்ப்பதே தனது மிக முக்கிய பணி என்கிறார் தியாகராஜன்.
சென்னை, பெங்களூருவில் உள்ளதைப்போல் சில முக்கிய நிறுவன ங்களை மதுரைக்கு கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாகவும், மதுரையில் பாலங்கள் உள்ளிட்ட பல வளர்ச்சித் திட்டங்களை தந்தையைப்போல் நிறைவேற்றி, மதுரையை அடுத்த தலைமுறையினருக்கான நகராக மாற்றிக்காட்டுவேன் எனக்கூறி தியாகராஜன் பிரச்சாரம் செய்கிறார்.
தனது வெளிநாட்டு நிறுவனங்க ளுடனான தொடர்புகளை பயன் படுத்தி ஏராளமான நிதியைப் பெற்று மதுரையை தொழில் சார்ந்த நகராக மாற்ற முடியும் என பிரச்சாரத்தின்போது, இளைஞர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். தொழில், அமைப்பு, சமுதாய ரீதியாக அனைத்து தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
தான் தேர்தலில் எதற்காகப் போட்டியிடுகிறேன் என மக்களிடம் தியாகராஜன் பேசும்போது, வெளிநாட்டு வேலை, வருமானம் என அனைத்தையும் விட்டுவிட்டு வந்தது எதற்காக என விளக்குகிறார்.
பரம்பரை சொத்துகள் தலைமு றைக்கும் போதுமான அளவுக்கு உள்ளது. இனிமேல் எனது குடும்பத்தின் கடமையை நிறைவேற்ற வேண்டும். அதுதான் மக்கள் சேவை. எனது தந்தை விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து மதுரை மக்களுக்காக செய்யவே தேர்தலில் போட்டியிடுகிறேன். என்னை தேர்ந்தெடுத்தால் நேர்மையாக உழைப்பேன். மதுரையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது உறுதி என இவர் மேற்கொள்ளும் பிரச்சாரம் வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் ஏற்கும் பொது வேட்பாளர் என்கிறார்.
அதேநேரம் அதிமுக வேட்பாளர் ஜெயபால் இலவச திட்டங்கள், கட்சியின் சின்னத்தைக் கூறி பிரச்சாரம் மேற்கொள்கிறார். முக்குலத்தோரை குறிவைத்தும், பணப்பட்டு வாடாவை நம்பியும் இவர் களத்தில் உள்ளார்.
தேமுதிகவில் டி.சிவமுத் துக்குமார், பாஜகவில் எம்.கார்த்திக் பிரபு, பாமகவில் டி.செல்வம், நாம் தமிழர் கட்சி எஸ்.வெற்றிக்குமரன், பார்வர்டு பிளாக் சார்பில் ஆர். சுதாகரும் போட்டியிடுகின்றனர்.
தியாகராஜன் வெற்றி பெற்றால் 6-வது முறையாக இக்கட்சி வென்ற சாதனையை படைக்கும். இத் தொகுதி யின் முடிவை தமிழகமே ஆவலோடு எதிர்பார்க்கிறது.
ரூ.4,300 கோடி தொழிலை கையாண்டவர்
ஆராய்ச்சியாளரான பொறியாளர் தியாகராஜன் எம்.எஸ்., எம்.பி.ஏ., படிப்பை வெளிநாட்டில் படித்தவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியவர். விஞ்ஞான துறையில் பல சாதனைகள் படைத்து, தனது கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்க காப்புரிமை பெற்றவர்.
ராணுவம், மின்னணு, அச்சு, ஆட்டோமொபைல் துறைகளில் உலகளவில் சிறந்த ஆலோசகராக பணியாற்றியவர். லேமன் பிரதர்ஸ் நிறுவனத்துக்காக உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன உலக மைய நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தியவர். ஸ்டாண்டர்ட் சார்டர்டு வங்கிக்காக உலகளவில் ரூ.4,300 கோடி மதிப்பிலான தொழில்களை கையாண்டனர். 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்ட அனுபவம் பெற்றவர்