Last Updated : 13 May, 2016 05:28 PM

 

Published : 13 May 2016 05:28 PM
Last Updated : 13 May 2016 05:28 PM

கிணத்துக்கடவில் வெற்றிக்கனியை பறிப்பது யார்?- அதிமுக, திமுகவுக்கு நெருக்கடி தரும் மதிமுக வேட்பாளர்

கோவை மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதிக்கு அருகில் உள்ளது கிணத்துக்கடவு தொகுதி. மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம், மாவுத்தம்பதி, பகுதிகளில் வன விலங்குகளினால் ஏற்படும் தொல்லை, வெள்ளலூர் குப்பைக்கிடங்குப் பிரச்சினை, மதுக்கரைப் பகுதியில் ஆக்கிரமிப்பு சிட்கோ பகுதியில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினை, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி ஜாம் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை , பொள்ளாச்சி வட்ட கிராமப் பகுதிக்கு விவசாயத்துக்கு பிஏபி தண்ணீர் என வேட்பாளர்கள் திணறும் அளவுக்கு மக்கள் பிரச்சினைகள் இத் தொகுதியில் உள்ளன.

1967-ம் ஆண்டு உருவான இத் தொகுதியில், 1977 முதல் நடந்த தேர்தல்களில் 7 முறை அதிமுகவும் 2 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது எஸ். தாமோதரன் (அதிமுக) உறுப்பினராக உள்ளார். கடந்த தேர்தலில் 30,266 வாக்குகள் வித்தியாசத்தில், திமுக வேட்பாளர் மு. கண்ணப்பனை தோற்கடித்தவர். தற்போது அதிமுக சார்பில் எட்டிமடை பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ஏ.சண்முகம் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

தொகுதியின் மையப் பகுதியான கிணத்துக்கட விலிருந்து 20 கிமீ தள்ளியுள்ள எட்டிமடை பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மற்ற பகுதிகளில் அதிருப்தி தெரிகிறது. இவர் வென்றால் மையப் பகுதி கிராமங்களின் பிரச்சினைகளை கவனிப்பாரா? என்ற சந்தேகத்தை அங்குள்ள மக்கள் எழுப்புகின்றனர். அதை சரிசெய்கிற மாதிரி, அப்படிப்பட்ட பகுதிகளில் இவர் தீவிர பிரச்சாரம் செய்வதையும் காணமுடிகிறது. வென்று வந்தால் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியிலேயே மக்களோடு, மக்களாக இருப்பேன் என வாக்குறுதி அளிப்பதையும் பார்க்க முடிகிறது.

அதே சமயம்சிட்டிங் எம்.எல்.ஏ. மீதான அதிருப்தி, அவர் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது தொகுதிக்கு பெரிதாக ஒன்றும் செய்யாதது போன்றவையும் அதிமுக வேட்பாளருக்கு அதிருப்திகளாக ஒலிக்கின்றன.

குறிச்சி பிரபாகரன்

திமுக சார்பில் குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி இவருக்கு சாதகமானலும், குறிச்சி பகுதியை தாண்டி தொகுதியின் பிற பகுதிகளில் உள்ள கிராமங்களில் முந்தையவரை போலவே இவருக்கும் அறிமுகம் இல்லாத நிலை உள்ளது. எனினும் அந்த பகுதிகளை எல்லாம் கணக்கில் எடுத்து அந்த வாக்காளர்களிடம் இயல்பாகப் பேசி பிரச்சாரத்தில் கவர்கிறார்.

மதிமுக ஈஸ்வரன்

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி, தமாகா சார்பில் மதிமுகவின் வே.ஈஸ்வரன் போட்டியிடுகிறார். இவர் வெள்ளலூர் குப்பைக் கிடங்குப் பிரச்சினை, கெயில் திட்டம் ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நடத்தியது, பல வருடங்களாக கிடப்பில் இருந்த மதுக்கரை முதல் வாளையாறு பைபாஸ் சாலைப் பணிகளை முடுக்கிவிட்டப் போராட்டம், பொள்ளாச்சி அகல ரயில்பாதை திட்டப் போராட்டம், மெட்ரோ ரயில் திட்டம் என மக்கள் பிரச்சினைகளில் ஈடுபட்டதால் தொகுதியில் பிரபலம் ஆனவர். அது, அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு இல்லாத பலமாகவே மக்களிடம் காணமுடிகிறது. ஆனால் அவையெல்லாம் ஓட்டாக மாறுமா? மாறினால் திமுக, அதிமுக வேட்பாளர்களில் யாருக்கு பாதகமாக அமையும் என்பதையே கணக்குப் போடுகிறார்கள் இத் தொகுதி அரசியல் நோக்கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x