விருதுநகரில் புதர்மண்டி கிடக்கும் கவுசிகா நதி: தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்க கோரிக்கை

விருதுநகரில் புதர் மண்டிக் கிடக்கும் கவுசிகா நதி.
விருதுநகரில் புதர் மண்டிக் கிடக்கும் கவுசிகா நதி.
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகரில் புராதனச் சிறப்பு பெற்ற கவுசிகா நதியில் மண்டிக் கிடக்கும் புதர்களை அகற்றி தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியிலிருந்து காட்டாறுகளாக வரும் தண்ணீர் ஒருங்கிணைந்து கவுசிகா நதியாக உருவெடுத்து வருகிறது.

இந்த நதியிலிருந்து வரும் தண்ணீர் வடமலைக்குறிச்சி கண்மாயில் நிரம்பிய பின்பு, விருதுநகர் வழியாக குல்லூர்சந்தை நீர்த்தேக்க அணையை அடைகிறது. பரந்து விரிந்த காட்டாறாக இருந்த கவுசிகா நதியில் கடந்த காலத்தில் எப்போதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் வெள்ளநீர் வடிந்து செல்லும் நதியாகவும் கவுசிகா நதி இருந்தது. இதில் வெள்ள நீரை தேக்கிவைத்து பயன்படுத்தும் வகையில் விருதுநகரில் தடுப் பணையும் கட்டப்பட்டது. ஆனால் காலப்போக்கில் மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் ஆக்கிரமிப்புகளாலும் கவுசிகா நதி சுருங்கியது. தடுப்பணைகளும் மறைந்து போயின.

கவுசிகா நதியை சீரமைக்க 2015-ல் ரூ.6.50 கோடி ஒதுக்கப்பட்டு பெயரளவில் தூர்வாரப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் தற்போது நதியில் ஆங்காங்கே மண் மேடுகள் ஏற்பட்டுள்ளதோடு நதி முழுவதையும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. குடியிருப்புகள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் கவுசிகா நதி சாக்கடை போல் மாறியுள்ளது.

கவுசிகா நதியில் ஏற்பட்டுள்ள சுகாதாரக்கேடால் விருதுநகரில் ஆத்துமேடு, பாத்திமாநகர், யானைக்குழாய், பர்மா காலனி, அய்யனார்நகர் மற்றும் அகமது நகர் மக்கள் சுகாதார கேடுகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கவுசிகா நதியை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வலியுறுத்து கின்றனர்.

தற்போது தொடர் மழை காரணமாக கவுசிகா நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், நதி நீரை தேக்கிவைக்க முடியாததால் மழைநீர் பயனற்று வீணடிக்கப்படுகிறது. எனவே நதியை ஆழமாக தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும், நதியில் குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பணைகள் கட்டப்பட்டு நீரை சேமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in