Published : 27 May 2022 09:51 PM
Last Updated : 27 May 2022 09:51 PM

முதல்வரின் கள ஆய்வு எதிரொலி: வட்டாட்சியர் அலுவலக செயல்பாடுகளை 10 நிலைகளில் ஆய்வு செய்ய உத்தரவு

சமீபத்தில் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் கள ஆய்வில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: வட்டாட்சியர் அலுவலங்களின் செயல்பாடு தொடர்பாக 10 நிலைகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு பட்டா, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய்த் துறையின் சேவைகளைப் பெற வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

இ-சேவை மையத்திற்குச் சென்று, அம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் எவ்வளவு நாட்களில் தீர்க்கப்படுகிறது போன்ற விவரங்கள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் மற்றும் இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதில் குறைபாடுகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அனைத்து கண்காணிப்பு அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று வட்டாட்சியர் செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்:

  1. நிலுவையில் உள்ள வருமானம், சாதி, வாரிசு உள்ளிட்ட முக்கியமான சான்றிழ்களின் நிலை
  2. சான்றிதழ் வழங்குவதில் தரம் எந்த நிலையில் உள்ளது?
  3. முதியயோர் ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்களின் நிலை
  4. முதியோர் ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதின் காரணம்
  5. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களின் நிலை
  6. துணை கோட்ட அனுமதி பெற வேண்டிய பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களின் நிலை
  7. இ-சேவை மையங்கள் முறையாக செயல்படுகிறாதா?
  8. தாசில்தார் அலுவலகங்களில் நேரடியாக அளிப்படும் மனுக்களின் நிலை
  9. ஆர்டிஓ மற்றும் டிஆர்ஓ அலுவலங்களில் பட்டா மாற்றம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களின் நிலை
  10. நில ஆவணங்களை தொடர்ந்து புதுப்பிக்கும் பணிகளின் நிலை

இவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x