Published : 31 May 2016 01:12 PM
Last Updated : 31 May 2016 01:12 PM

சிறந்த கல்வி சேவையில் குஞ்சப்பனை பழங்குடியினர் பள்ளி

மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவர்

சிறந்த கல்வி சேவையால், குஞ்சப்பனை பழங்குடியினர் பள்ளி மாணவர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் எல்லையில் அமைந்துள்ளது குஞ்சப்பனை பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளி. இங்கு, கோழிக்கரை, மாமரம், மேல் தட்டப்பள்ளம், கீழ் தட்டப்பள்ளம், மேல் கூப், கீழ் கூப், செம்மணாரை, கரிக்கையூர் மற்றும் சோலூர்மட்டம் ஆகிய பழங்குடியின கிராம மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 1953-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, 1996-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, 201 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி செல்ல மாணவர்கள் தயக்கம் காட்டி வந்த நிலையில், ஆசிரியர்களின் முழு முயற்சியால் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால், இப்பள்ளியில் 2015-16 கல்வி ஆண்டில் முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு எழுதிய 14 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 முறை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஆண்டு தேர்வு எழுதிய 30 பேரில், ஒரு மாணவர் தோல்வியடைந்ததால் தேர்ச்சி சதவீதம் 97 ஆக குறைந்தது. மாணவர் என்.விஸ்வநாதன், தமிழ் 92, ஆங்கிலம் 80, கணிதம் 100, அறிவியல் 96, சமூக அறிவியல் 98 என 465 மதிப்பெண்கள் பெற்று பழங்குடியினர் பிரிவில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவர் விஸ்வநாதன் கூறும்போது, “பெற்றோர் கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎஸ் அதிகாரி ஆவதே தனது லட்சியம்” என்றார்.

வகுப்பு ஆசிரியர் கஜேந்திரன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “பழங்குடியினர் பிரிவில், மாணவர் விஸ்வநாதன் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது பள்ளிக்கு பெருமை.

இதுகுறித்து, பள்ளி கல்வித் துறை நேற்று தான் தகவல் தெரிவித்தது. விஸ்வநாதனின் செயல்பாடு, பிற மாணவர்களும் கல்வியில் சிறக்க ஊக்கமாக அமையும்” என்றார்.

பள்ளித் தலைமையாசிரியர் பி.சித்ரா கூறும்போது, “பள்ளிக்கு வர பழங்குடியின மாணவர்கள் தயங்குவர். பல்வேறு முயற்சிக்கு பின்னர், தற்போது 201 பேர் படிக்கின்றனர். குஞ்சப்பனையை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி கரிக்கையூர் மற்றும் சோலூர்மட்டத்திலிருந்தும் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.

பெரும்பாலான மாணவர்கள் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளோம். 10-ம் வகுப்பு தேர்விலும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x