மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
Updated on
1 min read

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 27) வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் திமுக எம்பிக்களான டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோரது பதவிக் காலமும், அதிமுக எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலமும் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மே 24-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள, தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் இரா.கிராராஜன் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற செயலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம், திமுக வேட்பாளர்கள் 3 பேரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். திமுகவுக்கான 4 இடங்களில், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in