

கரூர்: மேட்டூர் அணை திறக்கப்பட்டு மாயனூர் கதவணையை வந்தடைந்தது காவிரி நீர். விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
மேட்டூர் அணை ஆண்டுதோறும் வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும். அணையில் போதிய தண்ணீர் இல்லாத காலங்களில் தண்ணீர் திறப்பு தள்ளிப்போனது உண்டு. நிகழாண்டு மேட்டூர் அணையில் 115 அடிக்கு மேல் தண்ணீர் இருந்த காரணத்தால் முன்கூட்டியே மே 24ம் தேதி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை நேற்று நள்ளிரவு வந்தடைந்தது. காவிரியில் வந்துகொண்டிருக்கும் 3,454 கன அடி தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை சென்ற பிறகு மாயனூர் கிளை வாய்க்கால்களில் திறக்கப்படும்.
மாயனூர் கதவணையை வந்தடைந்த காவிரி தண்ணீரை கரூர் உழவர் மன்ற அமைப்பாளர் சுப்புராமன் தலைமையிலான விவசாயிகள் இன்று (மே 27) மலர் தூவி வரவேற்றனர்.
இந்நிலையில், தற்போது மாயனூர் கிளை வாய்க்கால்களில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பயிரிடப்படுவது கிடையாது என்றபோதும் மாவட்டத்தில் 20,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை, வெற்றிலை, கரும்பு, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு ஆகிய பயிர்கள் கிளை வாய்க்கால் தண்ணீர் திறப்பு மூலம் பாசனம் பெறும்.
மேலும், நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தற்போது தண்ணீர் திறப்பு 10,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரு நாட்களில் மாயனூர் கதவணைக்கு வரும் நீர் மட்டம் அதிகரிக்கும்.