

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஏ.ஆர்.ஜே. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாதது குறித்து ‘தி இந்து’வில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது. சான்றிதழ் கிடைக்காத மாணவர்களின் பிரச்சினை குறித்தும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தச் செய்தி தொடர்பாக ஏ.ஆர்.ஜே. பொறியியல் கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
கடந்த 2010-11ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு நேரில் பட்டம் பெற இயலாத ஒரு சில மாணவர்களைத் தவிர, மற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. மேலும் 2012-13 கல்வியாண்டில் முடித்த மாணவர்களுக்கும் 2010-11க்கு முன்பு முடித்த அனைத்து மாணவர்களுக்கும் பட்டப் படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டது. பட்டம் பெறத் தவறிய ஒரு சில மாணவர்களுக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களும், பெற்றோரும் பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இதுதொடர்பாக மாணவர்களும், பெற்றோர்களும் எவ்வித குழப்பமும் அடைய வேண்டாம். வழக்கம்போல் கல்லூரி செயல்பட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.