Published : 27 May 2022 11:57 AM
Last Updated : 27 May 2022 11:57 AM

தாய்மொழிக்கு தனியார் பள்ளிகள் ஊக்கமளிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தாய்மொழிக்கு ஊக்கமளிக்கக்கூடிய பள்ளிகளாக தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும். தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டு பற்றும் ஒவ்வொரு மனிதருக்கும் மிகமிக முக்கியம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் DAV பள்ளிக்குழுமத்தின் சார்பில் புதிய பள்ளியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 27) திறந்துவைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "தங்கள் பள்ளி மட்டும் வளர்ந்தால் போதும் என்று நினைக்காமல், அரசுப் பள்ளிகளும் உயர வேண்டும் என்ற எண்ணத்தோடு உதவிக்கரம் நீட்டக்கூடிய இந்த தனியார் பள்ளியின் நோக்கத்தை மனதார பாராட்டுகிறேன்.

கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கக்கூடிய வகையில் முன்முயற்சிகளை இந்த பள்ளி நிர்வாகம் எடுத்துள்ளது. அரசின் சார்பில்,இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். இதன்மூலம் லட்சக்கணக்கான மாணவ மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளோம்.

அந்த மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் விடுபட்ட பாடங்களை கற்பித்து வருகிறோம். தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசாக அமைந்திருக்கிறது. பள்ளிக் கல்வியோடு நிறுத்திவிடாமல், கல்லூரிக் கல்வியையும், அதோடு உயர்கல்வி கொடுக்கும் அரசாக தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆன்மிகவாதியாக இருந்தாலும் மதத்தில் சீர்திருத்தம் பேசியவர்தான் தயானந்தா. உருவ வழிபாட்டை நிராகரிக்கக் கூடியவராகவும், மதத்தின் பெயரால் நடக்கக்கூடிய மோசடிகளை கண்டிப்பவராகவும் அவர் இருந்திருக்கிறார். மகளிருக்கு சம உரிமை, பெண்களுக்கு தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அக்காலத்தில் இருந்த குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்த்திருக்கிறார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். அந்த வகையில் 150 ஆண்டுகளுக்கு முன்பே சீர்திருத்தவாதியாக இருந்தவர்தான் தயானந்தர். உண்மையைத்தான் அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

மாணவ மாணவியரும் உண்மையுடன் ஒழுக்கம் உள்ளவர்களாக வளர வேண்டும். உங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் தனித்திறமையும், அறிவாற்றல் கூர்மையும், உண்மையும் நேர்மையும் உள்ளவர்கள்தான் எளிதில் முன்னேற முடியும்.

தாய்மொழிக்கு ஊக்கமளிக்கக்கூடிய பள்ளிகளாக இதுபோன்ற தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும். உங்களது மிகச் சிறப்பான திட்டங்களுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டு பற்றும் ஒவ்வொரு மனிதருக்கும் மிகமிக முக்கியம் என்ற முறையில், இந்த வேண்டுகோளை உங்களிடத்தின் நான் வைக்கிறேன்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x