Published : 27 May 2022 05:05 AM
Last Updated : 27 May 2022 05:05 AM
சென்னை: நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள 1,500 பேருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட யாத்ரீகர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை சூளையில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, ‘‘நடப்பாண்டில் தமிழகத்திலிருந்து 1,500 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக ரூ.10 கோடி நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
பயணம் மேற்கொள்ளும்போது உணவு, இருப்பிடம் ஆகிய செலவுகளை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். இந்தாண்டு ஹஜ் பயணம் கேரளாவிலிருந்து தொடங்க உள்ளது. அடுத்தாண்டு சென்னையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சிமஸ்தான் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போதுள்ள 3,000 உலமாக்களில் 1,600 பேருக்கு ஊதியம் தரப்படுகிறது. எஞ்சியவர்களில் தகுதியுள்ள உலமாக்களுக்கும் விரைவில் ஊதியம் அளிக்கவும் முடிவாகியுள்ளது. இதுதவிர உலமாக்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 10,058 உறுப்பினர்களுக்கு அடுத்த மாதம் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.
அதேபோல், ஓய்வுபெற்ற உலமாக்கள் தங்கள் சுயவிருப்பத்தின்படி ரூ.25,000 உதவி மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்கிக் கொள்ளலாம். உலமாக்கள் இறந்துவிட்டால் அவர்களின் மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT