கிங்ஸ் மருத்துவமனை கட்டிடத்தின் தரம் குறித்து ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கையின்படி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

கிங்ஸ் மருத்துவமனை கட்டிடத்தின் தரம் குறித்து ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கையின்படி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
Updated on
1 min read

சென்னை: கிண்டி கிங்ஸ் மருத்துவமனை கட்டிடத்தின் தரம் குறித்து ஐஐடி நிபுணர் குழு வழங்கும் ஆய்வறிக்கையின்படி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் திருவள்ளுவர் தெரு உட்பட 10 இடங்களில் புதிய மழைநீர் வடிகால் கட்டுவதற்கான பணிகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநகரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் நடைபாதைகளை அகலப்படுத்தும் போது மழைநீர் வடிகால்களை மூடியதால்தான் கடந்த ஆண்டு பருவமழையின் போது தியாகராயர் நகர், மாம்பலம் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும், ஏற்கெனவே உள்ளவற்றை சீரமைக்கவும் போதிய நிதி ஒதுக்கி தற்போது பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் தேங்கும் நிலையை முழுவதும் தவிர்ப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் உள்ள முதியோர் சிகிச்சை மைய கட்டிடத்தின் தரம், உறுதித்தன்மை குறித்து சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.

அந்தக் குழு வழங்கும் ஆய்வறிக்கை அடிப்படையில் சார்ந்த ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இதுவரை 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். வரும் ஜூன் 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது. தற்போது குரங்கு அம்மை பாதிப்புகள் உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவர்களிடம் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்யப்படுகிறது.

அதன்படி இங்கிலாந்தில் இருந்த வந்த ஒருவருக்கு அறிகுறிகள் தென்பட்டன. எனினும், பரிசோதனையில் குரங்கு அம்மை இல்லை என்பது உறுதியானது.

அதன்படி தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை கண்டறியப்படவில்லை. எனவே, பொதுமக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in