Published : 27 May 2022 06:20 AM
Last Updated : 27 May 2022 06:20 AM

போலி முகவர்களிடம் மக்கள் ஏமாறுவதை தடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட மத்திய அரசு அனுமதி கட்டாயம்: ஆணையர் எம்.ரவி வலியுறுத்தல்

சென்னையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறார் தாம்பரம் காவல் ஆணையர் எம்.ரவி. உடன் புலம்பெயர்ந்தோருக்கான தலைமை பாதுகாவலர் பிரம்மகுமார், ஜெசிந்தா லாசரஸ், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், பாதுகாவலர் வெங்கடாச்சலம் முருகன், மலேசிய தூதர் சரவணன் கார்த்திகேயன், பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன். படம்: ச.கார்த்திகேயன்.

சென்னை: போலி முகவர்களிடம் மக்கள் ஏமாறுவதை தடுக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை வெளியிட மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று தாம்பரம் காவல் ஆணையர் எம்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் பிரிவு சார்பில், 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு-பாதுகாப்பாக' என்ற தலைப்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் முகவர்களுக்கான கருத்தரங்கம் சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் எம்.ரவி பங்கேற்று பேசியதாவது:

அங்கீகரிக்கப்படாத உள்ளூர் முகவர்கள் ஆலோசனைப்படி சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்களை இங்கிருந்து அழைத்துச் செல்லும்போது ஒரு வேலையை கூறுவார்கள். வெளிநாட்டில் அவர்கள் வேறு வேலையை செய்ய நிர்பந்தப்படுத்தப்படுவார்கள். நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்தை விட அதிகமாக வேலை வாங்குவார்கள்.

இதைத் தடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்கள் வெளியிட மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் மூலம் அந்நிய செலாவணி ஈட்டப்பட்டு, நாட்டின் பொருளாதாரம் உயர்கிறது. அவர்களின் நலனை பாதுகாப்பது அனைவரின் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் புலம்பெயர்ந்தோருக்கான தலைமை பாதுகாவலர் பிரம்மகுமார் பேசியதாவது:வேலை தேடும்போது போலி முகவர்களிடம் சிக்கும் தொழிலாளர்களின் குடும்பமே சிதைந்து போகிறது. அதனால் போலி முகவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்கும் முகவர்கள், போலி முகவர்களை ஒழிக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

புலம்பெயர்ந்த தமிழர் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் பேசும்போது, "வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்வதற்கு பல்வேறு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு முந்தைய புத்தாக்க பயிற்சி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது" என்றார்.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் பேசும்போது, "தமிழகத்தில் 50 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அதனால் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவர்கள் செல்ல ஏற்பாடு செய்யும் முகவர்கள், வேலை அளிக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து எங்கள் அலுவலகம் மூலமாக அறிந்துகொள்ளலாம்'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் சென்னைக்கான மலேசிய தூதர் சரவணன் கார்த்திகேயன், மத்திய அரசின் சென்னை மண்டல புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர் வெங்கடாச்சலம் முருகன், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x