

பொன்னேரி: காட்டுப்பள்ளி தனியார் கப்பல்கட்டும் தளம், துறைமுகம் உள்ளிட்டவைகளில் மீனவ இளைஞர்கள் 1,500 பேருக்கு பணி வழங்கக் கோரி 4-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்த பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடல் வழியாக படகில் சென்று காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம் முற்றுகையிட்டனர். இதே கோரிக்கைக்காக பெண்கள் பழவேற்காடு பஜாரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே காட்டுப்பள்ளி தனியார் கப்பல் கட்டும் தளம், துறைமுகம் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, பழவேற்காடு பகுதி மீனவ மக்கள் போராட்டம் நடத்தியதால், 1,750 மீனவ இளைஞர்களுக்கு தனியார் கப்பல் கட்டும் தளம் உள்ளிட்டவைகளில் பணி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதில், முதற்கட்டமாக 250 பேருக்கு பணி வழங்கப்பட்டு, மீதமுள்ள 1,500 பேருக்கு பணி வழங்க வேண்டும், ஏற்கெனவே பணியில் உள்ள 250 பேரின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23-ம் தேதி பழவேற்காட்டில் உள்ள 3 ஊராட்சிகளைச் சேர்ந்த மீனவர்கள் காட்டுப்பள்ளி தனியார் கப்பல் கட்டும் தளம், துறைமுகம் உள்ளிட்டவைகளின் நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 4-வது நாளாக நேற்று தொடர்ந்த போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கடல் மார்க்கமாகச் சென்று, தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் பழவேற்காடு பஜாரில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டன. மீனவ பெண்களின் போராட்டம் மாலை 6.30 மணிக்கு மேலும் நீடித்தது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.