Last Updated : 27 May, 2022 07:15 AM

 

Published : 27 May 2022 07:15 AM
Last Updated : 27 May 2022 07:15 AM

அதிமுகவில் தனது செல்வாக்கை நிரூபித்த ஓபிஎஸ்: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஆர்.தர்மர் தேர்வு செய்யப்பட்டது எப்படி?

ராமநாதபுரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆர்.தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஓபிஎஸ் அதிமுகவில் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் களைத் தேர்ந்தெடுக்க ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கல் மே 24-ம் தேதி தொடங்கிய நிலையில் மே 31 கடைசி நாளாகும்.

திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் அதிமுக ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக்குழுத் தலைவருமான ஆர்.தர்மர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆர்.தர்மர் (51) முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

1987-ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த இவர் கிளைச் செயலாளர், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர், முதுகுளத்தூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர், 4 முறை ஒன்றிய கவுன்சிலர் 2 முறை நிலவள வங்கித் தலைவர் என பதவி வகித்துள்ளார்.

தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் 2020 முதல் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

முன்னாள் அமைச்சர்கள் முயற்சி

அதிமுகவில் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலரும் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிட வாய்ப்புக் கேட்டு முயற்சித்தபோதும் ஒன்றியச் செயலாளரான தர்மருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர். அதிமுகஓபிஎஸ்- ஈபிஎஸ் என இரு அணிகளாகப் பிரிந்தபோது ஓபிஎஸ் பக்கம் நின்றார். கடந்த 2 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் தலைமை வழங்கவில்லை. அந்த 2 முறையும் கீர்த்திகா முனியசாமிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து ஒன்றியச் செயலாளர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளைத் தக்க வைத்ததுடன், திமுக அலை வீசியபோதும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரானவர் தர்மர்.

சட்டப்பேரவை தேர்தலுடன் அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகக் கருதப்பட்டது. இந்நிலையில் தனது ஆதரவாளரான ஆர்.தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பை வழங்கியதன் மூலம் கட்சியில் மீண்டும் தனக்கு இருக்கும் செல்வாக்கை அவர் நிரூபித்துள்ளார்.

அதிமுகவில் மாநிலங்களவைக்கு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிறைகுளத்தான் 1996 முதல் 2002 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அவருக்குப் பின் அதிமுகவில் தற்போது அதே முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x