Published : 06 May 2016 08:05 AM
Last Updated : 06 May 2016 08:05 AM

திமுக ஆட்சி அமைந்தால் ஜனநாயக ஆட்சியாக இருக்கும்: சோனியா முன்னிலையில் கருணாநிதி திட்டவட்டம்

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் அது ஜனநாயக ஆட்சியாக இருக்கும் என்று சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி உறுதி தெரிவித்தார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: இங்கே எனக்கு முன்பு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழகத்தின் நிலையை, தமிழக ஆட்சியின் நிலையை சுட்டிக்காட்டினார். கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாநாட்டுக்கு சோனியா காந்தியை அழைத்து, “இந்தியாவின் திருமகளே வருகே” என்று வரவேற்றேன். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரண மாக திமுக காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான உறவு ஆழமானது, உறுதியானது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியையும், மன் மோகன் சிங்கையும் என்னால் மறக்கவே முடியாது. காரணம் பல ஆயிரம் கோடி செலவில் தமிழகத்துக்கு புதிய சாலை கள், மேம்பாலங்கள், சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு, திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம், பொடா சட்டம் ரத்து - இவற்றை எல்லாம் என்னால் என்றைக்குமே மறக்க முடியாது.

கடந்த 2013-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். மதுரையில் ரூ.100 கோடி செலவில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார். நான் 2 நாட்களுக்கு முன் மதுரைக்குச் சென்றிருந்தேன். ஜெயலலிதா ரூ.100 கோடி மதிப்பில் தமிழ்த்தாய்க்கு சிலை என்று சொன்னாரே, அந்த சிலை எங்கே என்று கேட்டேன். எல்லோரும் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். சிலை வைத்தால்தானே அது இருக்க முடியும். ஜெயலலிதா எப்படி மக்களை ஏமாற்றினாரோ அதுபோல் இப்போதும் ஏமாற்ற நினைக்கிறார். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு காலம் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறார். கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை கடந்த 5 ஆண்டுகளில் நடந்த கொலைகள் 7,567. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் 2792, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகள் 6,429. கடத்தல் சம்பவங்கள் 7454, கலவரங்கள் 11,603. இப்படி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்த நிலையிலே 5 ஆண்டு காலம் ஆட்சி நடத்திவிட்டு, ஆட்சியின் பெயரால் கொள்ளையடித்துவிட்டு தமிழகத்தை குட்டிச்சுவராக்கிவிட்டு, இன்னும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது நியாயம்தானா?

இங்கே இந்த கூட்டத்தைப் பார்க்கும்போது ஏதோ வெற்றிவிழா கூட்டமோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டு, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் அது ஜனநாயக ஆட்சியாக இருக்கும். மதச்சார்பற்ற ஆட்சியாக இருக்கும். அந்த ஆட்சிக்கு அனைவரும் பாடுபடவேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

துளிகள்

* திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் தீவுத்திடலில் நடத்தப்பட்ட பிரச்சார பொதுக்கூட்ட மேடை தமிழக தலைமைச் செயலகம் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது.

* திமுக தலைவர் கருணாநிதி மாலை 6.20 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 6.31 மணிக்கு மேடை ஏறினார்.

* மேடையில் அமர்ந்திருந்த சோனியா காந்தி கருணாநிதியைவிட கனிமொழியுடன்தான் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

* தமிழக பிரச்சாரக் கூட்டங் களில் வழக்கமாக கருணாநிதிக்கு பிறகு பேசும் சோனியா நேற்றைய தினம் கருணாநிதிக்கு முன்பாகவே பேசினார். சோனியா காந்தியின் பேச்சை தமாகாவிலிருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் மொழி பெயர்த்தார்.

* தங்கபாலு, கிருஷ்ணசாமி, கோபிநாத் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட இந்தக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x