தூத்துக்குடியில் வேன் மோதி ரயில்வே கேட் பழுது: 2 மணி நேரம் திறக்க முடியாததால் மக்கள் பாதிப்பு

தூத்துக்குடி 1-வது ரயில்வே கேட் நீண்ட நேரமாக பூட்டப்பட்டிருந்ததால் சைக்கிள்களை  தூக்கிக் கொண்டு  கேட்டை தாண்டிச்  சென்ற மக்கள். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி 1-வது ரயில்வே கேட் நீண்ட நேரமாக பூட்டப்பட்டிருந்ததால் சைக்கிள்களை தூக்கிக் கொண்டு கேட்டை தாண்டிச் சென்ற மக்கள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் நேற்று 2 மணி நேரத்துக்கு மேலாக மூடப்பட்டு கிடந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் செல்லும் ரயில் பாதைமாநகரத்தை இரண்டாக பிரிக்கிறது. இந்த ரயில் பாதையில் 4 இடங்களில் ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்மூன்றாவது ரயில்வே கேட்டில்மட்டும் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று ரயில்வே கேட்டுகளிலும் மேம்பாலமோ, சுரங்கப் பாதையோ இல்லை. இதனால் ரயில்கள் வரும் நேரத்தில் இந்த ரயில்வே கேட்டுகள் மூடப்படுவதால் தினமும் மக்கள்சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள 2-வது ரயில்வே கேட் பகுதியில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதால் இந்த ரயில்வே கேட் கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக மாணவ, மாணவிகள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று 1-வது ரயில் கேட் மீது வேன் மோதி பழுதடைந்ததால், அந்த கேட்டும் 2 மணி நேரத்துக்கு மேலாக மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமம் அடைந்தனர். திருநெல்வேலியில் இருந்து நேற்று காலை பயணிகள் ரயில் தூத்துக்குடி வந்தது. இதையடுத்து காலை 9 மணியளவில் 1-வது ரயில்வே கேட் மூடப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த வேன் மூடப்பட்டிருந்த ரயில்வே கேட் மீது மோதியுள்ளது. இதனால் ரயில்வே கேட் பழுதடைந்து திறக்க முடியாத நிலைஏற்பட்டது. ரயில் கடந்து சென்றபிறகும் கேட்டை திறக்க முடியவில்லை. இதையடுத்து ரயில்வேஊழியர்கள் விரைந்து வந்து கேட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு காலை 11.30 மணியளவில் கேட் சரி செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் இந்தவழியாக வந்த வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து போலீஸார் நிறுத்தப்பட்டு அவ்வழியாக வந்தவாகனங்கள் திருப்பி விடப்பட்டன. கடற்கரை சாலை வழியாக சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

தூத்துக்குடி நகரில் அமைத்துள்ள இந்த ரயில்வே கேட்டுகளால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் அவதிப்படும் நிலை தொடருகிறது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in