

திருவண்ணாமலை: ஆரணி அருகே அப்பநல்லூர் கிராமத்தில் தெரு மின் விளக்குகள் கடந்த 6 மாதங்களாக எரியவில்லை எனக்கூறி மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி கிராம மக்கள் நேற்று முன் தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அம்மாபாளையம் என அழைக்கப்படும் அப்பநல்லூர் கிராமத்தில் ஏஎஸ்ஆர் நகர், காமராஜ் நகர் உள்ளன. இப்பகுதி யில் உள்ள சாலைகளில் நடப் பட்டிருக்கும் மின் கம்பங்களில் மின் விளக்குகள் பொருத் தப்பட்டுள்ளன. மின் இணைப்பு உள்ளபோதும், தெரு விளக்குகள் கடந்த 6 மாதங்களாக எரியவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை என்பதால், விரக்தி அடைந்த கிராம மக்கள், மின் கம்பத்தில் தீப்பந்தங்களை கட்டி, தங்களது எதிர்ப்பை நேற்று முன் தினம் இரவு வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் அவர்கள், வீட்டிலும் மின் விளக்குகளை நிறுத்தி (சுவிட்ச் ஆப்) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, “தெரு மின் விளக்குகள் எரியாமல் உள்ளதால், எங்கள் பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அவசர தேவைக்கு கூட பெண்கள் மற்றும் சிறுவர்கள், தனியே நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எங்கள் பகுதியில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால், உயிருக்கும் ஆபத்து நிகழும் என்ற அச்சமும் இருக்கிறது. கடந்த 6 மாதங்களாக மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ள னர். எங்கள் பகுதிகளில் தெரு மின் விளக்குகள் எரிவதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.