Published : 27 May 2022 06:02 AM
Last Updated : 27 May 2022 06:02 AM

உங்கள் குரல் - தெருவிழா நிகழ்ச்சி எதிரொலியாக பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: திருப்பத்தூர் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தகவல்

திருப்பத்தூர் கஸ்தூரி பாய் தெருவில் சாலை சமன் செய்யும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்.

திருப்பத்தூர்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் திருப்பத்தூர் நகராட்சி சிகேசி திருமண மண்டபத்தில் கடந்த 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ‘‘உங்கள் குரல்-தெருவிழா’’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது வார்டு பிரச்சினைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரக்கோரியும் நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.

அப்போது, நகராட்சித் தலைவர் சங்கீதாவெங்கடேஷ் பேசும் போது ‘36 வார்டுகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவாக செய்து தரப்படும்’ என வாக்குறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில், 33-வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, தெருவிளக்கு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி சுத்தம் செய்தல், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என நகராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்த 2 நாட்களில் நகராட்சித் தலைவர் உத்தரவின் பேரில் பல்வேறு வார்டுகளில் கால்வாய் தூர்வாருதல், சாலை சமன் செய்தல், குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல், குப்பைக்கழிவுகள் அகற்றுதல், பழுதடைந்த மின்விளக்கு சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘உங்கள் குரல்- தெருவிழா’ நிகழ்ச்சியில் பொதுமக்கள் அளித்த கோரிக்கைகள் உடனடியாக பரிசீலித்து வார்டு வாரியாக ஆய்வு செய்தோம். அதில், தெருவிழா நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை கொண்டு முதற் கட்டமாக 12 மற்றும் 24-வது வார்டில் அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் 2 நாட்களாக நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது. அங்கு கழிவுநீர் சீராக செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, பாலம்மாள் காலனி பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 33-வது வார்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி-1ல் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், நிறைய வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் இல்லை என பொதுமக்கள் ‘உங்கள் குரல்’ தெருவிழா மூலம் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, 33-வது வார்டில் மசூதி தெரு, ஆர்.டி.ஓ அலுவலகம் தெருவில் சேதமடைந்த குடிநீர் குழாய் இணைப்பு சரி செய்யப்பட்டு அங்குள்ள வீடுகளுக்கு இன்று (நேற்று) குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, 4-வது வார்டு கஸ்தூரி பாய் தெருவில் மேடும், பள்ளமுமாக இருந்த சாலைகள் ‘பொக்லைன்’ மூலம் சமன் செய்யப்பட்டு அங்கு சீரான சாலை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

23-வது வார்டு ஆரீப் நகரில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு ஆய்வு நடத்தி மின்மோட்டார் மூலம் மழைநீர் உறிஞ்சப்பட்டு அங்குள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் ஆரீப் நகரில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பொதுமக்கள் என்னென்ன தேவையோ அதை நகராட்சி அலுவலகத்தில் மனுவாக வழங்கினால், உடனடியாக தீர்வு காண அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x