Published : 11 May 2016 08:55 am

Updated : 11 May 2016 08:58 am

 

Published : 11 May 2016 08:55 AM
Last Updated : 11 May 2016 08:58 AM

உயர்மட்ட மேம்பாலம், மருத்துவக் கல்லூரி, கூட்டு குடிநீர் திட்டம்: பூந்தமல்லியில் வாக்குறுதிகளை அள்ளிவீசி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

பூந்தமல்லி தொகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும், கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும், மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டியுள்ள சட்டப்பேரவை தொகுதிதான் பூந்தமல்லி. பூந்தமல்லி நகராட்சி மற்றும் திருமழிசை பேரூராட்சி ஆகியவை இத்தொகுதியில் அடங்கியுள்ளன. பிரசித்திப் பெற்ற பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் மற்றும் திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன.


பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்றம், வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் தனியார் மதுபான தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் இத்தொகுதியில் இயங்கி வருகின்றன. தலித், வன்னியர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கும் இத்தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது.

சென்னையிலிருந்து வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்கள், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ள பூந்தமல்லி பஸ் நிலையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல், பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பூந்தமல்லியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கை. மேலும், புதுசத்திரம் பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும், தாமரைப்பாக்கத்தில் கிடப்பில் உள்ள மாநகர போக்குவரத்து பணிமனை அமைக்கும் பணியை தொடர வேண்டும் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகள் வரிசை கட்டி நிற்கின்றன.

பூந்தமல்லி தொகுதியில் கடந்த 1977 முதல் 2011 வரை நடந்த 9 தேர்தல்களில் 3 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸும், ஒரு முறை தமாகாவும், ஒரு முறை பாமகவும், ஒரு முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் மணிமாறன் 99,097 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மதியழகன் 57,678 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக சார்பில் டி.ஏ.ஏழுமலை, திமுக சார்பில் இ.பரந்தாமன், மக்கள் நலக் கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் து.கந்தன், பாஜக சார்பில் ஏ.அமர்நாத் அர்ஜுனன், பாமக சார்பில் சி.பார்த்தசாரதி உள்ளிட்டோர் பிரதான கட்சி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

கூட்டு குடிநீர் திட்டம்

பெரியபாளையம் அடுத்த வெங்கலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் கூறும்போது, பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சில குக்கிராமங்களில் இன்னும் மின்சார வசதி கூட இல்லாமல் உள்ளது. அதேபோல் பட்டா கிடைக்காததும் மக்களுக்கு ஒரு பெரும் குறையாக உள்ளது. வெற்றி பெற்ற உடன் இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவேன். அதேபோல், தாமரைப்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவேன். 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட வதட்டூர் ஏரிக் கரைகள் பலப்படுத்தப்பட்டு அதில் தண்ணீரை சேமித்து அப்பகுதி விவசாயத்துக்கு பயன்படும் வகையில் செய்வேன். நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றி நீர்ப்பாசனத்துக்கு வழிவகை செய்யப்படும். மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும். பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பூந்தமல்லி, திருவேற்காட்டில் பாதாள சாக்கடை திட்டம் நிறை வேற்றப்படும். பூந்தமல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்து அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் திட்டத்தையும் வைத்துள்ளேன்’’ என்றார்.

கான்கிரீட் வீடுகள்

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக வேட்பாளர் டி.ஏ.ஏழுமலை, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இதன் மூலம் இத்தொகுதியை மாநிலத்தின் முதன்மை தொகுதியாக மாற்றுவேன். என் தொகுதியில் மருத்துவக் கல்லூரியை நிறுவ நடவடிக்கை மேற்கொள்வேன். அதேபோல், குடிசை வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். கிராமப் பகுதிகளில் மக்களுக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்’’ என்றார்.

தடுப்பணை கட்டப்படும்

வேப்பம்பட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ஏ.அமர்நாத் அர்ஜுனன், பூந்தமல்லி பஜாரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க குமணன்சாவடியில் இருந்து பைபாஸ் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படும். அரசு பள்ளிகளில் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் உடனடியாக கட்டி முடிக்கப்படும். மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவூர், செவ்வாப்பேட்டை, காக்களூர், பெருமாள்பட்டு ஆகிய வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்து ஒன்றியங்களிலும் நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் அமைக் கப்படும். செவ்வாப்பேட்டையில் அரசு அறிவித்த தொழிற்பயிற்சி நிலையம் அமைய ஆவண செய்யப்படும்’’ என்றார்.

வேலைவாய்ப்பு

தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாமக வேட்பாளர் சி.பார்த்தசாரதி கூறும்போது, திருவேற்காடு நகராட்சி தலைவராக 10 ஆண்டுகள் பதவி வகித்தேன். அப்போது ரூ.100 கோடியில் குடிநீர் திட்டம், ரூ.350 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தைக் கொண்டு வந்தேன். முடிவடையாமல் உள்ள இத் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். வேலப்பன்சாவடியில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாக்கம், எல்லாபுரம் ஒன்றியங்களில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், தொழிற்சாலைகள் கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை அளிப்பேன்’’ என்றார்.

இதேபோல், மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் து.கந்தன் உள்ளிட்ட பிற வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தவறவிடாதீர்!


    சட்டப்பேரவைத் தேர்தல்உயர்மட்ட மேம்பாலம்மருத்துவக் கல்லூரிகூட்டு குடிநீர் திட்டம்பூந்தமல்லி தொகுதிவேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x