Published : 26 May 2022 03:48 PM
Last Updated : 26 May 2022 03:48 PM

வெளிமாநிலத்தவருக்கான உள் அனுமதிச் சீட்டு முறையை கொண்டு வாருங்கள்: வேல்முருகன்

வேல்முருகன் | கோப்புப் படம்

சென்னை: “ராமேசுவரம் மீனவப் பெண் கொலை வழக்கு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழினத்தின் அரசுரிமையை மறுக்கின்ற மத்திய அரசு, வெளியார் ஆக்கிரமிப்பை ஊக்குவித்து வளர்த்து, தமிழர் தாயகத்தை சிதைக்க முனைகின்றது. தமிழகத் தாயகத்தை அயல் இனத்தாரின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாமல் நாம் திணறி வருகிறோம். தமிழகத்தில் அதிகளவில் நடைபெற்றுக் கொண்டுள்ள குற்றச் செயல்களின் எண்ணிக்கை, தமிழகத்தில் குடியேறியுள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் மேலும் உயர்ந்து வருவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

இச்சூழலில், ராமேசுவரம் அருகேயுள்ள வடகாடு மீனவ கிராமத்தில் கடற்பாசி எடுக்கச் சென்ற மீனவப் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அங்கு இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சியில் வட மாநிலத்தவர்கள், தமிழக காவல்துறையினரைத் தாக்கியதில் படுகாயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அப்போதே, தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்கள் நடத்தும் ஆக்கிரமிப்புகளும், குற்றச்செயல்களும் எவ்விதக் கேள்வி முறையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வெளி மாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது.

அதோடு, தமிழகத்தில் அதிகரித்து வரும் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர்க்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மீனவப் பெண் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வு அரங்கேறியுள்ளது.

எனவே, வெளியாரை வெளியேற்றுவதென்பது வெறும், தமிழர்களின் வேலை - வாழ்வுரிமை சார்ந்த சிக்கல் மட்டுமல்ல, அது தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை என்பதை உணர்ந்து, இனியும் தாமாதிக்காமல் உள் அனுமதி சீட்டு முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவப் பெண் கொலைசெய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது" என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x