

மழை காரணமாக வாக்குகளை எண்ணும் பணிகள் பாதிக்காமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பி.சந்தரமோகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் உள்ள 16 தொகு திகளின் வாக்குகளை எண்ணும் பணி மழை யால் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்க சிறப்பு பொறியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவு இயந் திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ‘வாட்டர் புரூப்’ பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது. 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ரேண்டம் அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். 900 ஊழியர்கள் இப்பணி யில் ஈடுபடுவார்கள். கூடுதலாக 20 சதவீதம் பேர் இருப்பு வைக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டு எண்ணும் பணி ஒவ்வொரு மேஜையிலும் ஒரு சூப்பர்வைசர், ஒரு உதவி பார்வையாளர், அரசியல் கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் நடைபெறும். ஒவ்வொரு அறைக்கும் ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர் ஒரு சுற்றுக்கு 14 மேஜைகள் வீதம் ஓட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிவுகளையும் தேர்தல் நடத்தும் அதிகாரிதான் வெளியிடுவார்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய 3 இடங்களில் நடக்கவுள்ளது.
இவ்வாறு சந்தரமோகன் கூறினார்.