Published : 26 May 2022 07:32 AM
Last Updated : 26 May 2022 07:32 AM
மதுரை: பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதுபோல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 32 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில்உள்ளார். தற்போது பரோலில்விடுதலையாகி தூத்துக்குடிமாவட்டம் சூரப்பநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், பேரறிவாளனை போல் ராஜீவ் காந்தி கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற தான் உட்பட 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
32 ஆண்டுகளாக சிறை
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: 32 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். தற்போது தங்கள் உத்தரவின் பேரில் சிறை விடுப்பில் இருந்து வருகிறேன். இதனால்உடல் நலம் குன்றிய என் வயதான தாயாரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள முடிகிறது.
7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு ஒப்புதல்தராமல் காலம் தாழ்த்தி வந்தஆளுநரிடம் மீண்டும் இவ்விவகாரத்தை கொண்டு செல்ல விரும்பாத உச்ச நீதிமன்றம், தனது உள்ளார்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.
நிர்வாக ஆணை
இதேபோல் தமிழக அரசுக்கும் உள்ளார்ந்த அதிகாரம் உள்ளது. இந்த முன்விடுதலை தொடர்பாக நான் அனுப்பிய மனு மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எஞ்சியுள்ள நான் உட்பட 6 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை, ஆளுநரிடம் அனுப்பாமல் தமிழக அரசுக்குரிய நிர்வாகஆணை அடிப்படையில் எங்களை விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT