Published : 26 May 2022 06:28 AM
Last Updated : 26 May 2022 06:28 AM

2-வது சனிக்கிழமைகளில் காங்கயத்தில் குறைதீர் முகாம்: நகராட்சி தலைவரின் அறிவிப்புக்கு வரவேற்பு

திருப்பூர்: காங்கயம் நகராட்சியில் கடந்த 22-ம் தேதி ‘இந்து தமிழ் திசை' சார்பில் தெருவிழா நடத்தப்பட்டது. அப்போது நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ்,"மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும்” எனஅறிவித்தார். காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொருமாதமும் 2-வது சனிக்கிழமை காலை 10 மணிக்கு காங்கயம் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்றத்தலைவர் தலைமையில் மக்கள்குறைதீர் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி தலைவர் ந.சூரியபிரகாஷ் கூறும்போது, "இந்து தமிழ் திசை நடத்திய தெருவிழா நிகழ்வில் பலரும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தனர். ஒற்றை குடையின் கீழ், மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தலாம் என அப்போது முடிவெடுத்தேன். அதன்படி அறிவிக்கவும் செய்தேன். அதனை பல்வேறு தரப்பினர் வரவேற்றனர். வேறு எங்கும் இல்லாத வகையில், காங்கயம் நகராட்சியின் வளர்ச்சிக்கு இந்த கூட்டத்தை முழுமையாக பயன்படுத்துவோம். நடப்பாண்டில் வரும் ஜூன் 11, ஜூலையில் 9-ம் தேதி, ஆகஸ்ட் 13, செப்டம்பர் 10, அக்டோபர் 8, நவம்பர் 12, டிசம்பர் 10 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குறைதீர் முகாம் நடைபெறும்.

‘உங்கள் தலைவர் காங்கயம் நகராட்சி’ மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்கள் பங்கேற்கலாம் "என்றார். பொதுமக்கள் சிலர் கூறும்போது, “மாதந்தோறும் பிரச்சினைகளை கேட்பதுநல்ல முன்னெடுப்பு. இதன்மூலமாக பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படும். மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் இந்த நிகழ்வை முன்னெடுத்துள்ள காங்கயம் நகராட்சி மற்றும் நகராட்சி தலைவர் உள்ளிட்டோரின் பணி ஆக்கப்பூர்வமான ஒன்று" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x