

பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி நிர்வாகத்துடன், ஒப்பந்த தொழிலாளர்கள் சென்னையில் நேற்று நடத்திய 3-ம் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதுகுறித்து, ஏஐடியுசி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் என்.சேகர் கூறியதாவது:
நெய்வேலி அனல்மின் கழகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தம் செய்யுமாறு தீர்ப்பளித்த பிறகும் என்எல்சி நிர்வாகம் அதை செய்ய மறுத்து வருகிறது.
ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தம் செய்தல், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதற்காக என்எல்சி நிர்வாகத்திடம் நோட்டீஸ் அளித்தோம். இதையடுத்து, என்எல்சி நிர்வாகம் எங்களை அழைத்து 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து நேற்று சென்னையில் மீண்டும் 3-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மத்திய அரசு உதவி தொழிலாளர் ஆணையர் அண்ணாதுரை தலைமையில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது கடந்த மார்ச் 31-ம் தேதி வரை என்எல்சியில் ஓய்வு பெற்ற மொத்த பணியாளர்களின் விவரங்களை கேட்டிருந்தோம். ஆனால், அந்த விவரங்களை என்எல்சி அதிகாரிகள் தர மறுத்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து வரும் 31-ம் தேதி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு சேகர் கூறினார்.