

குரோம்பேட்டை: குரோம்பேட்டையில் பல்லாவரம் மண்டல அலுவலக சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி சிக்னல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி கலந்துகொண்டு எல்இடி சிக்னலை திறந்து வைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் வழங்கினார்.
அப்போது தாம்பரம் காவல் ஆணையர் ரவி பேசியதாவது: வாகன ஓட்டிகள் தூரத்திலிருந்து பார்க்கும் போது தெளிவாக தெரியும் வகையில் குரோம்பேட்டையில் எல்இடி சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. இது சோதனை முயற்சி. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லை முழுவதும், இதே முறையில் எல்இடி சிக்னல் அமைக்கப்படும். சாலை விதிகளை மதித்தால் நிச்சயமாக மற்ற சட்டங்களையும் கடைபிடிப்பார்கள்.
குற்றப்பிரிவுக்கு 40 ஆயிரம் காவலர்களையும், சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு 60 ஆயிரம் காவலர்களையும் நியமிக்க வேண்டும். போக்குவரத்துத் துறையில் காவலர்கள் அதிகமாக இருந்தால் விதிகளை அமல்படுத்த முடியும்.
அதிக வேகம், 3 பேர் பயணிப்பது போன்ற போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இங்கு சிக்னல்களில் காவலர்கள் இல்லை என்றால் மக்கள் மதிக்காமல் செல்கின்றனர்.
பயன்பாடின்றி கிடக்கும் கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்யப்படும். ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் மூலம் அனைத்து சிக்னல்களும் மேம்படுத்தப்படும் என்றார்.