Published : 26 May 2022 06:27 AM
Last Updated : 26 May 2022 06:27 AM
சென்னை: சென்னை மாநகராட்சி மடுவன்கரை, கிண்டி மற்றும் ஆலந்தூர் எம்கேஎன் நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால்களை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் சென்னையில் கனமழை பெய்யும் போது மடுவன்கரையில் வெள்ளநீர் சூழ்ந்து, மழைநீர் வடிய தாமதமாகிறது. இந்த நீரின் ஒரு பகுதி அண்ணா சாலையை கடந்து ஆலந்தூர் சாலை வழியாக, அடையாற்றை அடைகிறது. மறுபகுதி வெள்ள நீர் தற்போது முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் சாலை தெற்கு (எம்.கே.என்.ரோடு), மடுவன்கரை பகுதிகளில் இருந்து ரயில்வே தண்டவாளத்தில் உள்ள சிறுபாலத்தை கடந்து மசூதி காலனி,வண்டிக்காரன் தெரு வழியாக வேளச்சேரி ஏரியை அடைகிறது.
எனவே, மடுவன்கரை தெற்கு பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கும் நீரை எம்கேஎன் சாலை வடக்கு வழியாக ஜிஎஸ்டி சாலையை கடந்து அடையாற்றை அடையும் வகையில் அகலமான மழைநீர் வடிகால், சிறுபாலங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் கனமழையின் போது கத்திப்பாரா பகுதியில் சாலையின் இடது புறம் உள்ள ஹாப்லிஸ் ஓட்டல் அருகில் மழைநீர்தேங்கி போக்குவரத்து தடைபடுகிறது. இதை நீக்கும் வகையில் நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பில் 2 மீட்டர்அகலம், 1.5 மீட்டர் உயரம் உள்ளவார்க்கப்பட்ட கான்கிரீட் பிளாக்குகள் சாலையின் குறுக்கே வெட்டிப்பதிக்கப்படும். இம்முறை கட்டுமானத்தால் 2 நாட்களில் கால்வாயைவிரைவாக கட்டி முடிக்க முடியும்.
மேலும், ஜவஹர்லால் நேரு சாலையில் அம்பாள் நகர் பகுதியில்மழைநீர் தேங்கி, கடந்தாண்டு நவம்பர் மாதம் போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. இதைப் போக்க நிரந்தர தீர்வாக அம்பாள் நகர் முதல் அடையாறு பாலம் வரை பழைய செங்கல் வளைவு வடிகாலுக்கு பதில் அளவில் பெரிய புதிய கான்கிரீட் வடிகால் அமைக்க உத்தரவிடப்பட்டது. பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் அமைச்சர் உத்தரவின்படி 400 மீட்டர் நீளத்துக்கு ரூ.3 கோடி மதிப்பில் புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் ஆகஸ்டில் முடிக்கப்படும்.
இந்த பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT