Published : 26 May 2022 06:24 AM
Last Updated : 26 May 2022 06:24 AM

மறு கட்டுமானம் செய்ய உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 386 குடியிருப்புதாரர்களுக்கு ரூ.92 லட்சம் கருணை தொகை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை புதுப்பேட்டை கொய்யாத் தோப்பு பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மறுகட்டுமானம் செய்யப்பட உள்ள குடியிருப்புகளில் வசிப்போருக்கு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கருணைத் தொகை வழங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வாரிய மேலாண் இயக்குநர் ம.கோவிந்தராவ், தயாநிதி மாறன் எம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர். படம்: ம.பிரபு

சென்னை: சென்னை புதுப்பேட்டை பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மறு கட்டுமானம் செய்யப்பட உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 386 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக தலா ரூ.24 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.92 லட்சத்து 64 ஆயிரத்தை உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை புதுப்பேட்டை கொய்யாத் தோப்பு பகுதியில் 1973-ம் ஆண்டு தலா 275 சதுர அடி பரப்பளவில் 302 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதேபோல அருகில் உள்ள காக்ஸ் காலனியில் 1985-ம் ஆண்டு தலா 238 சதுர அடி பரப்பளவில் 84 குடியிருப்புகள் கட்டப்பட்டன. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்த கட்டிடங்கள் உறுதித் தன்மையை இழந்துள்ளன. எனவேஇக்குடியிருப்புகளை இடித்துவிட்டு, இதே பகுதியில் தலா 400 சதுர அடி பரப்பளவில் சுமார் 426 குடியிருப்புகள் ரூ.63 கோடியே 88 லட்சத்தில் கட்டப்பட உள்ளன.

மறுகட்டுமானம் செய்யப்பட உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 386 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை வழங்கும் விழா புதுப்பேட்டை கொய்யாத் தோப்பு பகுதியில் நேற்று நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று தலா ரூ.24 ஆயிரம் வீதம் 386 பேருக்கு கருணைத் தொகையை வழங்கினார். மொத்தம் ரூ.92 லட்சத்து 64 ஆயிரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரன் பேசியதாவது: இந்த பயனாளிகள் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகளில் பல்நோக்கு அறை, சமையலறை, தனித்தனியே குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவை இடம்பெற உள்ளன. இதுவரை மறுகட்டுமானத்துக்கான கருணைத்தொகையாக குடியிருப்புதாரர் களுக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து இது ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமேலாண் இயக்குநர் ம.கோவிந்தராவ், தயாநிதி மாறன் எம்பி, சென்னை மாநகராட்சி பணிகள் குழு தலைவர் நே.சிற்றரசு, மண்டலக் குழுத் தலைவர்கள் எஸ்.மதன்மோகன், ப.ராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் சிவ.ராஜசேகரன், இரா.ஜெகதீசன், வாரிய தலைமைப் பொறியாளர் இராம.சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x