Published : 26 May 2022 06:00 AM
Last Updated : 26 May 2022 06:00 AM
வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் கடந்த சில நாட் களுக்கு முன்பு குறைந்து காணப்பட்ட வெயில் அளவு தற்போது அதிகரித்து வருவதால் பொது மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் எப்போதும் அதிகமாக காணப் படும். கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ளபெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி காணப்பட்டன. பாலாற் றில் கூட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெயில் அளவு குறைவாகவே காணப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் 1-ம் தேதி 95.9 டிகிரி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே 106 டிகிரி வரை வெயில் வாட்டி எடுத்தது.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தமிழ கத்தில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, வெயில் மேலும் அதி கரித்தது. இருந்தாலும், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங் களில் பரவலாக கோடை மழை பெய்தது.
கோடை மழையால் வேலூர் பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் கோடையை மறந்து வேலூர் மற்றும் திருப் பத்தூர் மாவட்ட மக்கள் நிம்மதி யடைந்தனர். கத்திரி வெயில் தாக்கத்தில் இருந்து இந்த ஆண்டு தப்பித்தோம் என எண்ணிய மக்களுக்கு அந்த சந்தோஷம் தொடர்ந்துநீடிக்கவில்லை.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 14 நாட்களுக்கு பிறகு வேலூர் மாவட்டத்தில் 23-ம் தேதி 100 டிகிரிக்கு மேல் பதிவானது. நேற்று 102.7 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.
இந்நிலையில், நேற்று காலை முதலே வேலூர் மாநகர பகுதியில் வெயில் சுட்டெரித்தது.
இன்னும் சில நாட்களுக்கு வேலூர் மாவட்டத்தில் வெயில் அளவு 100 டிகிரிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை மீண்டும் கொளுத்த தொடங்கியுள்ளதால் சாலையோரங்களில் தர்பூசணி, வெள்ளரிக்காய், கரும்பு ஜூஸ், பழச்சாறு, நீர்மோர், கேழ்வரகு கூழ் உள்ளிட்ட உடலுக்கு குளர்ச்சி தரும் உணவு பொருட்களின் விற் பனையும் அமோகமாக நடக்கிறது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கோடைகால நோய்கள் பரவ வாய்ப் புள்ளது. எனவே தேவை யில்லாமல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள். தெரி விக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT