

கள்ளக்குறிச்சி: கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள சிதிலமடைந்த கட்டிடத்தின் உள்ளே, எச்சரிக்கை பதாகை ஒட்டப்பட்டுள்ளது விந்தையாக உள்ளது.
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் 1984-ம் ஆண்டு கட்டப்பட்ட வேளாண்மை பொருட் கிடங்கு உள்ளது. இந்தக் கட்டிடம்உபயோகமற்ற நிலையில் சிதிலமடைந்து உள்ளது. அந்தக் கட்டிடம்பயன்பாட்டில் இல்லை. அதேநேரத்தில் அலுவலக ஊழியர்களில் சிலரும், அலுவலக நிமித்தமாக வரும் பொதுமக்களும் இயற்கைஉபாதைக்காகவும், புகைப்பிடிக்கவும் அப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கட்டிடத்தின்உட்பகுதியில் பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு என்ற பெயரில், கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. யாரும் அருகில் வரவேண்டாம் என்ற வாசகத்துடன் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பதாகை ஒட்டப் பட்டுள்ளது.
ஒரு கட்டிடம் பழுதடைந்து பயன்பாட்டுக்கு உகந்தது இல்லையெனில் அதை உடனடியாக இடிக்கவேண்டும் அல்லது கட்டிடத்தின் வெளிப்புறத்தில் எச்சரிக்கை பதாகை வைப்பது வழக்கம். அவ்வாறு எச்சரிக்கை பதாகை வைத்தால் தான் முன்னெச்சரிக்கையாக யாரும் அப்பகுதிக்கு செல்வது தடுக்க முடியும். ஆனால் இக்கட்டிடத்தில் வழக்கத்துக்கு மாறாக கட்டிடத்தின் உள்புறம் பதாகை வைத்திருப்பதை அலுவலக ஊழியர்களே விந்தையாக பார்க்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்தக் கட்டிடம் தங்களது கட்டுப்பாட்டில் இல்லை. வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றனர். ஆனால் அப்பகுதியில் புழங்குவது என்னவோ ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.