

தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும், அதிமுக, திமுக இனி இருக்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருச்சி விமானநிலைய வயர்லெஸ் சாலையில் நேற்றிரவு நடைபெற்றது. திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் பிரபுவை ஆதரித்து சீமான் பேசியதாவது:
9 ஆண்டுகால காமராஜர் ஆட்சியில் செய்த சாதனைகள் அளவுக்குக்கூட, கடந்த 50 ஆண்டு கால திராவிட கட்சிகளால் செய்ய முடியவில்லை. தமிழகத்தில் அரசு சார்பில் மின் உற்பத்தியைப் பெருக்காததற்கு, தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆட்சியாளர்களுக்கு கமிஷன் கிடைப்பதே காரணம்.
ஜல்லிக்கட்டு, ஷேல் காஸ், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, 7 பேர் விடுதலை என அனைத்திலும் திமுக, அதிமுகவினர் நாடகமாடுகின்றனர். திராவிட ஆட்சிகளால், இதுவரை கீழே கிடந்த தமிழன் இனி மேலே வரப் போகிறான். மக்களிடம் புரட்சி வெடிக்கும். அதிமுக, திமுக இனி இருக்காது. இது சாத்தியமா என சிலருக்கு சந்தேகம் இருக்கும். டெல்லியில் கெஜ்ரிவாலும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் இப்படித்தான் ஆட்சிக்கு வந்தனர்.
எனவே, மக்கள் முடிவு செய்தால் முடியாதது எதுவுமில்லை. தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டும். அதற்கு ஒவ்வொரு தமிழனும் துணையாக இருக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக் கப்படும். அதில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்களைக் கொண்ட தலைநகரமாக திருச்சி விளங்கும் என்றார் சீமான்.