Published : 25 May 2022 05:46 PM
Last Updated : 25 May 2022 05:46 PM

50, 47 வயது பெண்களுக்கு குழந்தைப் பேறு: எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை சாதனை

சென்னை: எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 50 மற்றும் 47 வயது பெண்களுக்கு குழந்தைப் பேறு கிடைத்து, நல்ல முறையில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

வாழ்க்கை முறையில் மாற்றம் உள்ளிட்டவை பலருக்கு குழந்தைப் பேறு என்பது சமீபகாலமாக எட்டாக்கனியாக மாறிவிட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் புற்றீசல் போன்று கருத்தரிப்பு மையங்கள் முளைத்து விட்டன. இந்த மையங்களில் பேக்கேஜ் முறையில் சிகிச்சை அளிக்கும் வகையிலான திட்டங்கள் கூட உள்ளன.

இப்படி பல ஆயிரங்களை செலவு செய்தும் கருத்தரிப்பு மையங்கள் மூலம் குழந்தைப் பேறு அடைந்திடாத தம்பதிகளுக்கும் குழந்தைப் பேறு உறுதி செய்யும் வகையில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் உள்ளதை தற்போது நடந்துள்ள சம்பவம் உறுதி செய்துள்ளது.

சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு சிறப்பான முறையில் மகப்பேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நீண்ட காலமாக குழந்தைப் பேறுக்காக காத்திருந்த 50 மற்றும் 47 வயதான பெண்மணிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த 50 வயதான ராதிகாவுக்கு கடந்த 25 ஆண்டுகளாக திருமணமாகி குழந்தை இல்லாத சூழலிலும் , 47 வயதான வள்ளி கடந்த 17 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை மருத்துவர்களின் தீவிர முயற்சியால் இரண்டு பேருக்கும் தற்போது குழந்தை பிறந்துள்ளது. 50 வயதான ராதிகாவிற்கு இரட்டை ஆண் குழந்தைகளும் , 47 வயதான வள்ளிக்கு பெண் குழந்தையும் பிறந்த நிலையில், நல்ல உடல் நலத்துடன் குழந்தைகள் காணப்படுகின்றன.

இது குறித்து மருத்துவமனை இயக்குநர் விஜயா கூறுகையில், "நவீன உலகில் அதிகரிக்கும் மலட்டுத்தன்மையை போக்க IVF , IUI உட்பட செயற்கை கருத்தரிக்கும் நவீன சிகிச்சைகளை வழங்க அரசு மருத்துவமனைகளிலும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை எழும்பூர் மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைகளில் இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இனிவரும் நாட்களில் அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு செயல்பாடுகள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x