சட்டம் - ஒழுங்கு | “இன்னும் 4 ஆண்டு கால திமுக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது” - வானதி சீனிவாசன்

சட்டம் - ஒழுங்கு | “இன்னும் 4 ஆண்டு கால திமுக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது” - வானதி சீனிவாசன்
Updated on
1 min read

கோவை: "சமூக நீதி, சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றை வெறும் வார்த்தைகளில் வைத்துக் கொண்டிருக்காமல் திமுக அரசு அதை செயலில் காட்ட வேண்டும்" என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவையில் இன்று (மே 25) செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது: "உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஓராண்டில் 75 சதவீதம் உயர்ந்திருந்த போதிலும், ரஷ்யா, உக்ரைன் போர் சூழல் காரணமாகவும் விலை அதிகரித்த போதிலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பை அறிவித்துள்ளது. கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தங்கள் பங்குக்கு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மாட்டோம் என மாநில நிதியமைச்சர் பிடிவாதம் பிடிக்கிறார்.

ஏழை, எளிய மக்களுக்காக மாநில அரசும் தங்கள் பங்குக்கு விலையை உடனடியாக குறைத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி முழுமையாக விலை குறைப்பை திமுக அரசு செய்யவில்லை. அதில், ஒரு பகுதியைத்தான் குறைத்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தின் தலைநகரில் கூட பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையில்தான் சட்டம்-ஒழுங்கு உள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பிரநிதிதிகள் ரவுடித்தனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பெண் பிரதிநிதிகளின் கணவர்கள் செய்யும் அராஜகம் அதிகமாக உள்ளது.

சமூக நீதி, சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றை வெறும் வார்த்தைகளில் வைத்துக்கொண்டிருக்காமல் திமுக அரசு அதை செயலில் காட்ட வேண்டும்.

கடந்த 4,5 மாதங்களாக தமிழக அமைச்சர்களின் துறைகளில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்துகொண்டு அரசு செய்ய வேண்டிய கடமைக்கெல்லாம் தனித்தனியாக பணம் நிர்ணயித்து வருகின்றனர்.

இதை ஒரு பத்திரிகை வெளிக்கொண்டு வந்தது என்ற காரணத்துக்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பயமுறுத்தப்பார்க்கின்றனர். ஊடகங்களை மிரட்டி பணியவைக்க முடியும் என்ற எண்ணம் ஓராண்டுக்குள் திமுக அரசுக்கு வரும் என்றால், இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சி எப்படி இருக்கும் என நினைத்தால் பயமாக இருக்கிறது" என்று வானதி சீனிவாசன் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in