Published : 25 May 2022 12:59 PM
Last Updated : 25 May 2022 12:59 PM

குறைந்தது நீர்வரத்து: ஒகேனக்கலில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் அனுமதி

தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஒகேனக்கல், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த 18-ம் தேதி ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

பொதுவாக, ஒகேனக்கலில் நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி என்ற நிலையை கடக்கும்போது காவிரியாற்றிலும், அருவியிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பது ஆபத்தை ஏற்படுத்தும்.

எனவே, நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியை எட்டும் நிலையில் வழக்கமாக காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவிக்கும். அந்த வகையில் கடந்த 18-ம் தேதி ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்தது. அடுத்து வந்த சில நாட்களிலும் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகளவில் இருந்ததால் இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீடித்து வந்தது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நேற்று காவிரியாற்றில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்த நிலையில், இன்று 2,000 அடி மேலும் சரிந்து விநாடிக்கு 8,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுலா வருவோரை நம்பியுள்ள பரிசல் இயக்குபவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் இன்று காலை 9 மணி முதல் ஒகேனக்கல் காவிரியாற்றிலும் அருவியிலும் குளிக்கவும் பரிசல் இயக்கவும் பாதுகாப்பு தொடர்பான நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x