Published : 25 May 2022 01:33 PM
Last Updated : 25 May 2022 01:33 PM
சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் குழு மூலம் சிகிச்சை பெற்றுவரும் மாணவி சிந்துவை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை கோடம்பாக்கம், வெள்ளாள தெருவை சேர்ந்தவர் சக்தி (43). இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தேவி (36). இவர்களுக்கு சிந்து என்ற பெண் உள்ளார். கடந்த 2020 டிசம்பரில், தோழி வீட்டின் மூன்றாவது மாடியில் சிந்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன. தாடையின் ஒரு பகுதி முழுவதும் சேதமைடைந்தது.
அதன்பின், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், உயிர் தப்பிய சிந்து இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே உள்ளார். இந்நிலையில், ஆசிரியர்கள், தோழியர் உதவியுடன், வீட்டில் இருந்தப்படி படித்து, சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதினார்.
இது தொடர்பான செய்தி, அவரது தந்தை பேட்டியுடன் ‘இந்த தமிழ் திசை’ செய்தித் தளத்தில் வெளியானது. மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் சிந்து அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்ப மருத்துவர் கொண்ட குழு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பதற்கான பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிந்துவுக்கு அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல்வர் ஸ்டாலின், சிந்துவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிந்துவுக்கும் அளிக்கும் சிகிச்சை முறைகளையும் முதல்வர் கேட்டறிந்தார். மாணவி சிந்துவுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிந்துவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
முதல்வரின் இந்த சந்திப்பின்போது ஒமந்தூரார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனிடையே, குடும்ப பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, ஓராண்டு காலம் மருத்துவமனை வளாகத்தில் டீ வியாபாரம் செய்திட சிந்துவின் தந்தை சக்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT