

சென்னை: கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில கட்டப்பட்டுள்ள முதியோர் மருத்துவமனையின் கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் வளாகத்தில தேசிய முதியோர் மருத்துவமனை ரூ.151 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனா காலத்தில் இந்த கட்டிடம் கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் கரோனா தொற்று முற்றுக்கு வந்த நிலையில், அந்த கட்டிடத்தை தேசிய முதியோர் மருத்துவமனையாக மாற்ற முதல்வர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த மருத்துவமனை தேசிய முதியோர் மருத்துவமனையாக மாற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
இதனையடுத்து மருத்துவமனையை தரைத்தளம் உள்ளிட்ட மூன்று தளங்களிலும் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பல இடங்களில் காரை பிய்த்துக்கொண்டு பொள, பொளவெனக் கொட்டுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்பு தான் முதியோர் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
இதன்படி மருத்துவமனையை ஆய்வு சென்னை ஐஐடி பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி கட்டிட தொழில் நுட்பம் மற்றும் கட்டுமான மேலாண்மை துறை பேராசிரியர் மனு சந்தானம், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் வாசுதேவன், பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு விரைவில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.