

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்தது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து (மே 4) தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. கடந்த வாரம் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்ட தால் சில நாட்கள் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. பின்னர் படிப்படியாக மழை குறைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண் டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி யுள்ளது.
அக்னி நட்சத்திரம் வரும் 29-ம் தேதி வரை நீடிப்பதால், அது வரை வெப்பத் தாக்குதல் அதிக மாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
“அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனத்தால் தமிழகம், புதுவையில் மழை பெய்யும். சென்னை மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸாக வும், குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 நகரங்களில் நேற்று 100 டிகிரியைத் தாண்டி வெயில் சுட்டெரித்தது. சென்னை நுங்கம்பாக்கம் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட், சென்னை விமான நிலையம் 103.64, கடலூர் 101.3, நாகப்பட்டினம் 100.4, பாளையங்கோட்டை 100.58, புதுச்சேரி 102.56, சேலம் 101.3, திருச்சி 103.28, வேலூர் 103.82 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.