Published : 25 May 2022 07:00 AM
Last Updated : 25 May 2022 07:00 AM

தூர்வாரப்பட்ட முக்கோணம் பார்க் தெரு கழிவுநீர் கால்வாய்: காரிமங்கலம் பேரூராட்சி விரைவான நடவடிக்கை

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் முக்கோணம் பார்க் தெருவில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் முன்னிலையில் நடந்தது.

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் நடந்த `உங்கள் குரல் - தெருவிழா' நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று பேரூராட்சி நிர்வாகத்தால் உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம்பேரூராட்சியில், கடந்த 22-ம் தேதி‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், காரிமங்கலம் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து ‘உங்கள் குரல் - தெருவிழா’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது. பேரூராட்சியின் 15 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் கோரிக்கைகள், குறைகள் உள்ளிட்டவை குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் நேரடியாக தெரிவிக்கும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பேரூராட்சித் தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், பேரூராட்சி செயல் அலுவலர் கே.சேகர் ஆகியோர் பொதுமக்களின் கோரிக்கைகள், புகார்கள் உள்ளிட்டவற்றை பொறுமையாக கேட்டுக் கொண்டதுடன், ஒவ்வொரு கோரிக்கை மீதும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள், நிறைவேற்றித் தர தேவையான கால அளவு உள்ளிட்டவற்றை தெரிவித்து உறுதிஅளித்தனர். அந்த கோரிக்கைகளின் வரிசையில், முனுசாமி, சாதிக் உள்ளிட்டோர் முக்கோணம் பார்க் தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாகவும் விரைந்து சுத்தம் செய்து தர வேண்டும் என்று கேட்டிருந்தனர்.

இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10-வது வார்டில் உள்ள முக்கோணம் பார்க் தெரு, 9-வது வார்டில் உள்ள முஸ்லிம் தெரு ஆகியவற்றில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை உடனடியாக தூய்மைப் பணியாளர்கள் மூலம் சீரமைத்தனர். சீரமைப்புக்கு பின்னர் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாயில் தேக்கமடையாமல் தாழ்வான பகுதியை நோக்கி ஓடத் தொடங்கியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் முன்னிலையில் நடந்த இந்தப் பணியின்போது பேரூராட்சி தலைவரின் உதவியாளர் ராஜா, கவுன்சிலர் ராஜம்மாள், முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த பணியின்போது பேரூராட்சித் தலைவர் கூறும்போது, ‘காரிமங்கலம் பேரூராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் விரைவாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. குடியிருப்புவாசிகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை கழிவுநீர் கால்வாயில் கொட்டாமல், குப்பை கொட்டுவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர்க்க வேண்டும். இதன்மூலம், நீண்ட காலத்துக்கு கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்கும். ஒரு நகரின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எங்கும் தேங்காமல் தாழ்வான இடத்தை நோக்கி தடையின்றி செல்லும்போதுதான் அப்பகுதியின் சுகாதாரமும் மேம்படும். இதற்கு அனைவரும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x