

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ரூ.60 கோடி மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச் சின்னங்களைக் கண்டு ரசிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், இத்தலம் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் குறுகிய இடத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அதனால், நகருக்கு வெளியே ஈசிஆர் சாலையையொட்டி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மாமல்லபுரம் நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்பட்டன. பின்னர், புதிய பேருந்து நிலையம் நிர்வாகக் காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மாமல்லபுரத்தில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்பேரில், பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வணிக வளாகம், உணவகம், தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் ரூ.60 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா, ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.