

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (திஷா) கூட்டம் நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும், திஷா குழு உறுப்பினர் செயலருமான ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் எம்பியும் திஷா குழுத் தலைவருமான ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
இதில், பல்வேறு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக, சமூக நலத் துறை சார்பாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அனைத்து துறைகள் சார்ந்த திட்டப் பணிகளை எவ்வித சுணக்கமுமின்றி மேற்கொள்ளவும், தொய்வு ஏற்பட்டுள்ள பணிகளை விரைந்து செயல்படுத்தவும் திஷா குழுவினர் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினர்.