பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு; மாநிலங்களுடன் பகிரும் கலால் வரியில் மாற்றம் செய்யவில்லை: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விளக்கம்

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு; மாநிலங்களுடன் பகிரும் கலால் வரியில் மாற்றம் செய்யவில்லை: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விளக்கம்
Updated on
1 min read

சென்னை: மாநிலங்களுடன் பகிரும் அடிப்படை கலால் வரியில் மத்திய அரசு மாற்றம் செய்யவில்லை என பெட்ரோல் விலை குறைப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்றுவிடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் வாக்குறுதியை மறந்த திமுக அரசு, பெட்ரோல் மீதுரூ.5-க்கு பதில் வெறும் ரூ.3 மட்டுமே குறைத்தது. டீசலுக்கோ ரூ.4-இல் ஒரு பைசா கூட குறைக்காமல் மக்களை ஏமாற்றியது.

மக்களின் சுமைகளைக் குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரிபொருள்களின் மீதான வரியை 2-வது முறையாகக் குறைத்துள்ளது.

இதன்மூலம் முதல் முறையாக தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. அப்படியிருக்க வருவாய் இழப்பு எப்படி ஏற்படும். மத்திய அரசு, மாநிலங்களுடன் பகிரும், அடிப்படைக் கலால்வரியில் எந்த மாறுதலும் செய்யவில்லை.

ஆனால் கூடுதல் கலால் வரி, விவசாய கட்டமைப்புக்கும் மற்றும் சாலை மேம்பாட்டுக்குமான வரித் தொகுப்புகள் திட்ட ஒதுக்கீடு நிதியாகக் கருதப்படுவதால், அதை மாநிலங்களின் திட்டங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது.

ஆகவே மாநிலங்களுடன் நேரடியாகப் பகிராத திட்ட ஒதுக்கீடு வரியில்தான், மத்திய அரசு வரிக்குறைப்பு செய்துள்ளது. தமிழகம் தவிர்த்தஇந்தியாவின் பிற மாநிலங்களில்எல்லாம் மத்திய அரசின் வரிகுறைப்பு நடவடிக்கையை அடுத்து, மாநில அரசும் விலையைக் குறைத்து மக்கள் நலனில் அக்கறை காட்டியது.

ஆனால் திமுக அரசோ தன் நியாயமற்ற நடத்தையைத் தொடர்கிறது. திமுக அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் ரூ.2, டீசலுக்கு ரூ.4 வீதம் குறைப்பதோடு, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100மானியம் வழங்கி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும் 2020-ம் ஆண்டு அரசாணையை மாற்றியமைத்து, மாநில மதிப்புக் கூட்டு வரியை அடிப்படை விலையின் சதவீதமாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in