

தவ வாழ்வு வாழ்கிறேன் என்று கூறும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் சொத்து எதற்கு? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வனை ஆதரித்து, ஜி.ராமகிருஷ்ணன் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, “ஊழலுக்கு துணை போக மாட்டேன், ஊழல் கட்சிகளுடன் உடன்பாடு வைத்துக்கொள்ள மாட்டேன் என்று அறிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை மனதாரப் பாராட்டுகிறேன்.
காங்கிரஸ் கட்சியுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முன்வர வில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் கூடா நட்பு கேடாய் முடியும் என்று கூறி காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக தலைவர் கருணாநிதி முறித்துக்கொண்டார். ஆனால், அவர் இப்போது அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். அதிமுகவில் அடிமைகளாக இருப் பவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்.
அரசியல் என்பது வியாபாரம் இல்லை. மக்களுக்கு சேவை செய்வதாகும். அதிமுக ஆட்சியில் நடத்துநர் பணி முதல் துணைவேந்தர் பணி வரை, பணம் கொடுத்து நியமனம் செய்தனர். அதிமுகவின் ஊழல் ஆட்சிக்கு மாற்று ஆட்சி வர வேண்டும். திமுக என்பது மாற்று கட்சி இல்லை. அவர்கள் இருவருக்கும் ஊழலில் வேறுபாடு இல்லை. தவ வாழ்வு வாழ்கிறேன் என்று கூறும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மற்றம் சொத்துகள் எதற்கு? மதுரையில் 22 ஆண்டுகள் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கிரானைட் ஊழல் நடைபெற்றது. அதில், திமுக மற்றும் அதிமுகவுக்கு தொடர்பு உள்ளது.
உங்கள் இருவரையும் ஆட்சியில் மக்கள் அமர்த்தியது எதற்காக? கொள்ளை அடிப் பதற்காகவா? இயற்கை வளம் கொள்ளை போகிறது. மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வட்டாட்சியர், போலீஸ் ஏட்டு, வருவாய் ஆய்வாளர் ஆகியோர் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டனர். ஊழல் ஆட்சி மீண்டும் வரக்கூடாது. விஜயகாந்த் தலைமையில் ஊழலற்ற ஆட்சி அமையும். நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள் கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
டாஸ்மாக் கடைகளால் தமிழ் சமூகம் அழிந்து வருகிறது. மதுபானத் தொழிற்சாலை நடத்தும் அதிமுக, திமுகவால் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அவர்கள் இருவரும் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுள்ளனர். அவர்களால் டாஸ்மாக் கடைகளை மூட முடியாது.
சமூகத்தை அழித்து வரும் டாஸ்மாக் கடைகளை நாங்கள் மூடுவோம். வளமான தமிழகத்தை உருவாக்க மக்கள் முன் வர வேண்டும். மே 19-ம் தேதி விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்” என்றார்.