

கடலூர்: கடலூரில் உயிரிழந்த தந்தையின் உடலை வணங்கி விட்டு, மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளிக்குச் சென்று எழுதினார்.
கடலூர் அருகே உள்ள சாவடி, ஞானாம்பாள் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்தார்.
இவரது மகள் அவந்திகா (15). கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது 10-ம் பொதுத் தேர்வு நடந்து வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 தேர்வுகளை அவந்திகா எழுதியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு திருமண நிகழ்ச்சியில், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது சிவகுமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இந்த நிலையில் நேற்று 10-ம் வகுப்பு கணக்கு தேர்வு நடைபெற்றது. தந்தை உயிரிழந்த சோகத்தில் இருந்த அவந்திகா, ‘எப்படி தேர்வு எழுதுவது?’ என்று தெரியாமல் குழப்பத்திலும், ஒருவித மனஇறுக்கத்திலும் இருந்தார்.
அவரது குடும்பத்தினர் அவருக்கு தைரியம் கொடுத்து, தேர்வு எழுதுமாறு கூறினர்.
மனதை திடப்படுத்திக் கொண்ட அவந்திகா, நேற்று காலை தன் தந்தையின் உடலை வணங்கி விட்டு, கண்ணீருடன் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றார். அங்கு சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு ஆறுதல் கூறி, தைரியம் அளித்தனர்.
தொடர்ந்து அவந்திகா தேர்வு அறைக்குச் சென்று தேர்வு எழுதிவிட்டு மதியம் வீட்டிற்கு திரும்பினார். சிவகுமாரின் இறுதி சடங்கு நேற்று மாலை நடைபெற்றது.