

நான் பொது வாழ்க்கையில் இருப்பது மற்றவர்களுக்கு சேவை செய்யத்தான், என்று ஆலந்தூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஆர்.எஸ்.பாரதியின் அறிக்கைக்கு சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி மாமன்ற கூட்டத்தில் வியாழக்கிழமை விளக்கம் அளித்தார்.
ஆலந்தூர் நகர்மன்றத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி, மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக மாமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கள ஆய்வு செய்ய மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சைதை துரைசாமி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி சட்டத்திற்கு புறம்பாக வீட்டையும், வணிக வளாகத்தையும் கட்டியுள்ளார் என்று குற்றம்சாட்டி ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதற்கு வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் சைதை துரைசாமி அளித்த பதில்:
நான் சிஐடி நகரில் குடியிருந்து வரும் வீடு 1981-ல் அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் எனக்கு ஒதுக்கப்பட்டது. அந்த இடம் எனக்கு உரிமையாக்கப்பட்டபோது அதற்குரிய தொகையை அரசுக்கு செலுத்தியிருக்கிறேன். அந்த வீடு தற்போது பல கோடி மதிப்புள்ள சொத்தாக உயர்ந்துள்ளது. இதை நானோ எனது குடும்ப வாரிசுகளோ பயன்படுத்தக்கூடாது என்று முடிவு செய்து, அதை மனிதநேய அறக்கட்டளைக்கு தான மாக வழங்கி யிருக்கிறேன். இதை போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் பயன் படுத்தி வருகின்றனர். நான் வசித்து வரும் வீட்டின் வாடகையை அறக்கட்டளைக்கு செலுத்தி வருகிறேன். மேலும் வேளச்சேரியில் உள்ள எனது திருமண மண்டபம், பல கோடி மதிப்புள்ள 14 வீட்டுமனை கள் ஆகியவற்றையும் அறக்கட்டளைக்கு தானமாக கொடுத் துள்ளேன். இது தெரியாமல் ஆர்.எஸ்.பாரதி, நான் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, ஏமாற்றி சொத்து சேர்ப்பதைப்போல் தெரிவித்துள்ளார். சைதைதுரைசாமி பொது வாழ்க்கையில் இருப்பது மற்றவர்களுக்கு சேவை செய்யத் தான்.
நகராட்சி நிலத்தை ஆக்கிரமித்த எஸ்.ஆர்.பாரதி
உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளபடி, மாநகராட்சி பள்ளியை கள ஆய்வு செய்ததில் ஆர்.எஸ்.பாரதி பள்ளியை ஒட்டி வீடு கட்டியுள்ளார் என்பதும், பள்ளி வழியாக வீட்டின் பின்புற வழியை அமைத்துள்ளார் என்பது கள ஆய்வில் தெரியவருகிறது. அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார் அவர்.