Published : 25 May 2022 06:56 AM
Last Updated : 25 May 2022 06:56 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்திட ரூ.14 கோடி மதிப்பீடில் லினாக் கருவி நிறுவப்படும் என்று சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கன்னியாகுமரி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது:
மக்களின் நலனைகருத்தில் கொண்டு தமிழகம்முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் புதிய கட்டிடங்கள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதி, மருத்துவ உபகரணங்கள் உட்பட தேவையானவற்றை கட்டமைத்து தருவதோடு, பல்வேறு சீரிய திட்டங்களை அறிவித்து அதனை முனைப்புடன் அரசு செயல்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பாண்டு நிதி நிலை அறிக்கையின்படி விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில் விபத்து பதிவுக்கான தரவுகளை பதிவேற்றம் செய்ய புதிய மென்பொருள் ரூ.5.26 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். குருந்தன்கோடு, எடைகோடு, சி.ஆர்.புதூர், அகஸ்தீஸ்வரம், கோதநல்லூர் ஆகிய பகுதிகளில் வட்டார அளவிலான பொது சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்தும் விதமாக வட்டார பொது சுகாதார அலகுகளுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.4.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வலிமைபடுத்தப்படும்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரகப் பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் 8 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.2.59 கோடிமதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
ஆறுதேசம், கணபதிபுரம் மற்றும்பழுகல் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.2.48 கோடியிலும், வடிவீஸ்வரம் அரசு நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையத்துக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும், நாகர்கோவில் மாநகராட்சியில் தமிழ்நாடுநகர்ப்புற சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் நவீன உபகரணங்களுடன் கூடிய, சுகாதார ஆய்வககட்டிடம் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்படும்.
நாகர்கோவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் உள்ளநகர பொது சுகாதார ஆய்வகங்களில் கர்ப்பிணித் தாய்மார்களின் பரிசோதனைக்காக கலர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
வடசேரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எலக்ட்ரோ கார்டியோ கிராபி மற்றும்ரத்த சேமிப்பு கிடங்கு உபகரணங்கள் ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில்மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் சேவைகளை மேம்படுத்தி அனைவருக்கும் நலவாழ்வு என்றஇலக்கினை அடைந்திடும் வகையில், ஊரகப் பகுதிகளில் உள்ள 113 கிராம துணை சுகாதார நிலையங்கள் ரூ.16.8 லட்சம் செலவில் நலவாழ்வு மையங்களாக மாற்றியமைக்கப்படும்.
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ சிகிச்சையை மேம்படுத்திட ரூ.14 கோடி மதிப்பீடில் லினாக் கருவியும், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளின் நலனுக்காக ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சைக்காக நவீன உபகரணங்கள் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும்மருத்துவமனையில் அவசர சிகிச்சை மீட்பு மையங்கள் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும். பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் புகார் மற்றும் ஆலோசனைகளை நேரடியாகப் பெற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் மருத்துவனை வரவேற்பு பிரிவில் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்படுவர். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஆய்வின் போது அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT