

தொழிலதிபர் ஆவதே என் எதிர்கால லட்சியம் என்று பிறமொழிப் பாடம் படித்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த சென்னை மாணவி எஸ்.ஸ்ருதி கூறியுள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் தமிழ் அல்லாமல் பிரெஞ்சை மொழிப் பாடமாக எடுத்துப் படித்த சென்னை நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்ருதி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.ஸ்ருதி ‘தி இந்து’விடம் கூறும்போது, “எல்.கே.ஜி.யில். இருந்தே இப்பள்ளியில்தான் படித்து வருகிறேன். பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1194 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். பத்தாம் வகுப்பில் 500-க்கு 491 மதிப்பெண்கள் வாங்கினேன். எனது வெற்றிக்கு அப்பா தர், அம்மா நாராயணி, ஆசிரியர்கள், கடவுள் என எல்லோரும் காரணம். எதிர்காலத்தில் நான் பெரிய தொழிலதிபராக விரும்புகிறேன். என்ன தொழில் செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
என்னைப் பொறுத்தவரை நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு மனதை ஒருநிலைப்படுத்தி படித்தாலே போதும். தினமும் உழைத்தால் சாதிக்க முடியும். அதற்காக எதையும் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை” என்றார்.