Published : 26 May 2016 10:20 AM
Last Updated : 26 May 2016 10:20 AM

அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்த தையல் தொழிலாளியின் மகள் அரசியலில் ஈடுபட விருப்பம்

எஸ்எஸ்எல்சி தேர்வில், அரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில் பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி என்.ஜனனி, 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது மதிப்பெண்: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்- 100, சமூக அறிவியல் 100. ஒட்டுமொத்தமாக மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

என்.ஜனனி கூறியதாவது: எனது சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள், தலைமையாசிரியை என அனைவருக்கும் பங்கு உண்டு. என்னுடைய தந்தை நாரயண சாமி, தாய் சுமதி. தந்தை தையல் தொழில் செய்து வருகிறார்.

பள்ளியில் சிறப்பு வகுப்பு கற்பிக்கப்பட்டது. இதனால் மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. மேல்நிலை வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு எடுத்து படிக்க உள்ளேன். ஐஏஎஸ் தேர்வு எழுதி ஆட்சியராக பணியாற்ற வேண்டும். மேலும் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன் என்றார்.

கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வேதா, வேலூர் சோளிங்கர் திருமதி எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நேகா கவுசர் ஆகியோர் 500-க்கு 496 மதிப்பெண் எடுத்து 2-ம் இடம் பெற்றனர்.

ஈரோடு சவக்காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஹரிணி, புதுக்கோட்டை கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.பவ தாரணி, புதுக்கோட்டை ராணி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி நிஷாத் ரஹீமாமா, கரூர் மலைக்கோவிலூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஆர்.சந்திர சேகர், திருவண்ணாமலை பெருங் காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.மேகலா, திருவண்ணாமலை இரும்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி என்.தீபா, சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கேத்ரீன் அமலா ராக்கினி ஆகியோர் 500-க்கு 495 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x