Last Updated : 24 May, 2022 04:35 PM

 

Published : 24 May 2022 04:35 PM
Last Updated : 24 May 2022 04:35 PM

ஜூன் முதல் ஆக. வரை மக்காச்சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை இருக்கும்: வேளாண் பல்கலை. கணிப்பு

கோவை: வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை இருக்கும் என வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இன்று (மே 24) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது மக்காச்சோளத்தின் விலை முன்னறிவிப்பை அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மக்காச்சோளம் பயிரிடப்பட்டாலும், காரிஃப் பருவத்தில் மட்டும் தான் 85 சதவீதம் அளவில் பயிரிடப்படுகிறது. வேளாண் மற்றும் விவசாய நலன் அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி 2021-22-ம் ஆண்டில் மக்காச்சோளமானது இந்தியாவில் கிட்டத்தட்ட 9.5 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 32.4 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2020-21-ம் ஆண்டில் 0.4 மில்லியன் எக்டர் பரப்பளவில் 2.56 மில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.

வர்த்தக மூலங்களின்படி, தமிழகத்துக்கு மக்காச்சோள வரத்தானது ஆந்திரா, கா்நாடகா, பிஹார் ஆகிய மாநிலங்களிலிருந்து வருகிறது. பிஹாரிலிருந்து முன்னரே மார்ச்சில் தொடங்கியுள்ளது. இது வரை ஜூலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்துக்கான, கர்நாடகா மாநிலத்தின் மக்காச்சோள வரத்தானது வரும் ஆகஸ்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில் தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை குவிண்டாலுக்கு ரூ.2,400 முதல் ரூ.2,500 ஆக இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x